திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஆப்ரகுடி கிராமம் உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான மயானம் ஆனது ஆப்பரக்குடியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே உள்ளது. இந்நிலையில் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை நினைத்து துயர படுகிறார்களோ இல்லையோ இந்த சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் செல்ல நாம் என்ன பாடு பட வேண்டும் என்ற கவலை தொற்றிக்கொள்ளும் நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பயணத்துக்கான பாதை இல்லாமல் ஆப்பரக்குடி மக்கள் பெருந்துன்பம் பட்டு வருகின்றனர்
இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவரது பிரேதத்தை வயல் வழியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் செல்கின்றனர். அப்பொழுது பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று அப்பகுதியை சேர்ந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் அவரது உடலை தூக்கி கொண்டு சென்ற இறுதி ஊர்வலமானது விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பாடுபட்டு வளர்த்த சம்பா பயிரின் நடுவே சென்றது. சடலத்தை தூக்கி சென்ற பலரும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என்பதால் உயிரிழந்தவர்களுக்காக வருந்துவதா ? அல்லது தாங்கள் வளர்த்த பயிர்கள் காலில் மிதிபட்டு சாவதைக் கண்டு வருந்துவதா? என மனம் வருந்திக்கொண்டே கலக்கத்துடன் விளைநிலங்களில் இறங்கி இடுகாட்டிற்கு சென்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் ஆதி திராவிடர் மக்கள் யாரேனும் உயிரிழந்தால் இடுகாட்டிற்கு உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாத காரணத்தினால் தொடர்ந்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் அவர்கள் தற்போது உயிரிழந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்லும் வழி பிற்படுத்தப்பட்டோர் மக்களின் நிலமாக உள்ளது அவர்கள் அந்த இடத்தில் சாலை அமைக்க அனுமதி தர மறுக்கிறார்கள் என தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி 50 வருடமாக சாலை வசதி இல்லாமல் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். உடனடியாக மயானத்துக்கு செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.