திருவாரூர் மாவட்டத்தில் 40,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடைக்கால பயிராகவும் பணப்பயிராகவும் விளங்கும் பருத்தியை பயிரிடுவதில் கடந்த சில வருடங்களாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முழுவதும் கனமழை என்பது கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பருத்தி வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், கோட்டூர், கமலாபுரம், நொச்சிகுடி, கருப்பூர், புனவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது.



 

இந்த நிலையில் பருத்தி பயிரிட்டு 60 நாட்கள் ஆன நிலையில் தற்போது பூ வைத்து காய் வைக்கும் பருவத்தில் பருத்திச் செடிகள் உள்ளன. மேலும் பருத்தி கோடை கால பயிர் என்பதால் 30 நாட்களில் ஒருமுறை தண்ணீரும் 90 நாளில் ஒரு முறை தண்ணீர் வைத்தாலே பருத்தி சாகுபடிக்கு போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் இப்பகுதிகளில் உரிய வடிகால் வசதி இல்லாத காரணத்தினாலும் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பருத்தி பயிர்கள் அழுகி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கி பருத்திச் செடிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கமலாபுரம் புனவாசல் நொச்சிக்குடி கருப்பூர் பான்ற பகுதிகளில் வடிகால் வசதி முறையாக இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பருத்தி வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை நீரேற்றும் இயந்திரம் மூலம் இறைத்து வருகின்றனர்.மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள காரணத்தினால் பருத்தி பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயிகள் 60 நாட்கள் இந்த பருத்தி பயிரினை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழையின் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை நிலவுவதால் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.