திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வலியுறுத்தினார்.

 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் வயல் வெளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை முன்னாள்  அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நேரில் பார்வையிட்டார். அதுசமயம் திருவாரூர், திருநெய்பேர், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, பெரும்புகளுர், சலிப்பேரி, நன்னிலம், திருப்பாம்புரம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு கேட்டு கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டு கொண்டார்.



பின்னர் முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் கழகத்தினர் மூலம் நிவாரண உதவிகளையும் செய்து வருகிறோம். தற்போது மேலும் கூடுதல் மழை பெய்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டோம். மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு அதிகமான வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இளம் பயிராக இருப்பதால் அவைகளால் பெரும் தண்ணீரை எதிர்கொள்ள முடியாது. இதனால் பயிர் பாதிப்பு அதிகம் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கூடுதல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தண்ணீரை வடித்தல் உள்ளிட்ட மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.



மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்துள்ளது. மேலும் கனமழை இருப்பதாக கூறப்படுவதால் மழைநீர் சூழும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளும் நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாய பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார். அதுசமயம் கட்சியின் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.