திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக கடந்த 2012 ஆம் ஆண்டு ஆண்டு முதல் பணிபுரிந்து வருபவர் கார்த்திகை சாமி. இவருக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக இந்த பள்ளியில் அவர் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்  அடிப்படையில் அப்போது இருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் இவரை கடந்த 30.07.2022 அன்று பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

 

இந்த பணியிடை நீக்கம்  செய்வதற்கான காரணங்களாக நான்கு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஆணை குப்பத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவரது கடிதம் தலைமை ஆசிரியர் கடிதம் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து கொடுத்த கடிதம் மாவட்ட குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள  தெரிவித்ததின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து கார்த்திகை சாமி இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது மாவட்ட குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற் கோ அல்லது நன்னிலம் காவல் நிலையத்திற்கோ எந்தவித கடிதமும் அனுப்பப்படவில்லை என்று பதில் வந்துள்ளது.

 

அதேபோன்று வீரபாண்டியன் என்பவர் ஆணைக்குப்பம் என்கிற ஊராட்சியில் வசிக்கவில்லை  என்று ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த கடிதம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தனக்கு எதிராக வந்துள்ள புகார்களின் நகல்களை கொடுக்குமாறு கேட்டதற்கு விசாரணை சென்று கொண்டிருப்பதால் நகல்களை அளிக்க முடியாது என்று வந்த பதில் போன்றவற்றின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  கார்த்திகை சாமி புகார் அளித்துள்ளார்.

 

இந்த புகார் மனுவில் என் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பி எனக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி  தற்கொலைக்கு தூண்டும் வகையிலும் அவதூறு பரப்பும் தலைமை ஆசிரியர் குலசேகரன், ஆசிரியர்கள் சக்தி ராஜசேகர், உமா மகேஸ்வரி, சக்திவேல் மற்றும் பணியிடை நீக்கம் செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் செய்தி இதழ்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதி வரும் நிருபர்களான பாலமுருகன் மற்றும் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கார்த்திகை சாமி குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தநிலையில் எட்டு மாத காலம் பணியிடை நீக்கத்தில் இருந்த கார்த்திகை சாமி தற்போது திருவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இருப்பிணும் தவறே செய்யாமல் தன்னை பணியிடை நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் மீண்டும் அதே பள்ளியில் தன்னை பணியமர்த்த வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அவர் புகார் மனுக்களை அனுப்பி வருகிறார்.மேலும் தன் மீது அவதூறு பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி யிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் குலசேகரன் இந்த பிரச்சனை காரணமாக விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் பாலமுருகன் என்பவர் செய்தியை வெளியிடாமல் இருப்பதற்கு 4 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஆசிரியர் கார்த்திகை சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆசிரியர் கார்த்திகைசாமியின் மனைவி சகாயமேரி கூறுகையில் எனது கணவர் மீது அவதூறு பரப்பு வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோன்று பணம் கேட்டு மிரட்டியவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறு செய்யாமல் தண்டனை அனுபவித்த எனது கணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.