எடையூர், சங்கேந்தி, வட சங்கேந்தி, ஆரியலூர், குலமாணிக்கம், ஓவரூர், வெள்ளங்கால், பின்னத்தூர், செறுபனையூர், குன்னலூர் உப்பட 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் தங்களது சிகிச்சைக்கு எடையூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைதான் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் தலைமையிடமாக செயல்பட்டு வரும் எடையூர்- சங்கேந்தி அரசு மருத்துமனையில் ஐந்து மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதால் பொதுமக்கள் மருத்துவம் செய்ய 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை அல்லது 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது.
இதனால் நோயாளிகளுக்கு நிறைய பணவிரயம் கால தாமதமும் ஏற்படுவதுடன் அபாய கட்டத்திற்கு நோயாளிகள் சென்றுவிடுகின்றனர். இங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பலர் உயர் படிப்பு தொடர சென்னை, கோயம்புத்தூர், மற்றும் திருவாரூர் போன்ற இடங்களுக்கு சென்று விட்டதால் பணியில் இருந்த இடம் காலியாகவே உள்ளது. ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை பார்க்கிறார். ஒரு நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட நபர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பார்க்க வருகின்றனர். இரவு நேரங்களில் ஆபத்தான நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் செவிலியர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனக்கு சிபாரிசு செய்கிறார்கள். அதற்குள் நோயாளியின் உயிர் பிரிந்து விடுகிறது.
மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அவசர நேரத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இருப்பினும் ஆக்சிஜன் வசதி கூட மருத்துவமனையில் இல்லை இதனால் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையிலேயே பல நோயாளிகள் உயிர் பிரிந்துள்ளது. மருத்துவம் படிக்காத மருத்துவர்கள் சமீபத்தில் மாவட்டம் முழுவதும் போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது. இங்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இதனால் அவருக்கு பனிச்சுமையும் மனச்சோர்வும் ஏற்படுகிறது.
வட்டார மருத்துவ அலுவலர், அலுவல் பணி காரணமாக பொதுவாக மருத்துவமனையில் இருப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தை தவிர மருத்துவம் பார்க்க மருத்துவர் இல்லை , பிரசவ பெண்களுக்கு, பிரசவம் பார்க்க திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை வியாதி நோயாளிகள் வாடிக்கையாக பெறும் மாத்திரைகளை பெறுவதில் சிரமம் உள்ளது. ரத்த பரிசோதனை, இசிஜி, எக்ஸ் ரே போன்ற எல்லா மிஷின்களும் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு பயன்படவில்லை, மேலும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இங்கு 108 ஆம்புலன்ஸ் தேவை உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மருத்துவமனைக்கு நிரந்தரமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது .