நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்த பொழுது திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோப்படித் தெரு சாய்பாபா கோவில் அருகில் பேருந்துக்கு முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி உள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து தறிகெட்டு ஓடி எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி சாலை ஓரத்தில் கொட்டி கிடந்த கருங்கல் ஜல்லி மீது ஏறி நின்றது.
இந்த விபத்தில் பாமனியிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சத்தியசீலன் செல்வம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதியதில் திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில் குழந்தையின் சிகிச்சைக்காக சென்று விட்டு திரும்பி ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாமனார் அண்ணாதுரை வயது 60 மருமகள் பிருந்தா வயது 24 கிருத்திகா வயது 1 ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அண்ணாதுரை பிருந்தா ஆகிய இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் ஓட்டுநர் முருகானந்தம் வயது 50 என்பவருக்குகாயம் ஏற்பட்டது இதனையடுத்து காயம் அடைந்த அனைவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்து நடந்த இடம் திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் அதேபோன்று திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் மேலும் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை ஆகிய சாலைகளை இணைக்க கூடிய பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் நாள்தோறும் விபத்துகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஆகையால் இந்த பகுதியில் போக்குவரத்துக் காவல் துறை காவலர்களை 24 மணி நேரமும் பணியில் அமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகின்றனர். குறிப்பாக காவலர்களை நியமித்தால் விபத்துக்களை குறைக்க முடியும் அது மட்டுமின்றி இந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் மேலும் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். இல்லையென்றால் தொடர்ந்து இந்த பகுதியில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.