திருவாரூரில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த இரண்டு பேருந்துகள் திருவாரூர் புதிய பேருநந்து நிலையத்திலிருந்து மன்னார்குடி செல்வதற்காக கடந்த 23ம் தேதி இரவு நின்று கொண்டிருந்தது. அதேபோன்று மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பல்சர் வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அடுத்தடுத்து மூன்று அரசு பேருந்து கண்ணாடியில் கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளனர். பல்சர் வாகனத்தில் வந்தவர்களில் ஒருவன் ஹெல்மட் அணிந்து இருந்ததாகவும், பின்னால் அமர்ந்திருந்தவன் பை ஒன்றில் கற்களை எடுத்து வந்து முதலில் ஒரு பேருந்து  கண்ணாடி மீது எரிந்ததாகவும் அது சேதம் அடையாத காரணத்தினால் அருகில் இருந்த மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் பின் கண்ணாடியில் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் அந்த பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுமையாக உடைந்து நொறுங்கியது. 




அதனை தொடர்ந்து மன்னார்குடிக்கு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மன்னார்குடி செல்வதற்காக பயணிகளை ஏற்றி  கொண்டு நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளையும் கற்களை வீசி அந்த மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதில் ஒரு பேருந்தின் முன்பக்க கண்ணாடியும், மற்றொரு பேருந்தின் பின்பக்க கண்ணடியும் முழுமையாக உடைந்து நொறுக்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வருகை தந்து புதிய பேருந்து நிலையத்தின் ஒரு கடையில் இருந்த சிசிடிவி கேமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தார். மொத்தம் மூன்று வண்டிகளில் வந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அரசு பேருந்து தாக்கிய மர்மநபர்கள் யார் எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 




அதனைத் தொடர்ந்து திருவாரூர் நகர காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்  திருவாரூர் கொடிக்கால்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த 35 வயதான சாகுல் ஹமீது திருவாரூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஹாஜாநிவாஸ், கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த முகமது மகசூன் மஹதீர் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதான அஹமதுல்லா ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசை சேர்ந்த ஜ.என்.ஏ காவல்துறையினர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அன்றைய தினம் தான் திருவாரூரில் இந்த அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவம் என்பது நடைபெற்றது. மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு நபர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.