குறுவை காப்பீடு செய்ய அனுமதி வழங்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள மாநிலத் தலைவர் பி.ஆர் பாண்டியன் செய்தியாளர் இடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் இரண்டாவது ஆண்டாக குறுவை பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை 30க்குள் பிரீமியம் செலுத்துவதற்கான இறுதி கெடு முடிவடைய உள்ள நிலையில் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். முன் பட்ட குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையில் அடிபட்டு ஆங்காங்கே விவசாயிகள் கவலையில் உள்ளார்கள். தற்போது 5 லட்சம் ஏக்கரில் காவிரி டெல்டாவில் மட்டும் குறுவை சாகுபடி செய்து வருகிறார்கள். காப்பீடு செய்ய முடியாமல் தொடர்ந்து பருவம் மாறி பெய்யும் பெரும் மழையால் குறுவையும் அழிந்து போகும் என்கிற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். குறுவை காப்பீடு செய்ய இரண்டாவது ஆண்டாக இதுவரையிலும் தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிடவில்லை. 




வேளாண் துறையில் கேட்டால் நாங்கள் காப்பீட்டு நிறுவனத்துக்கு டெண்டர் வைத்து தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளோம். விரைவில் அனுமதி வந்துவிடும் என்கிற பதில் வருகிறதே தவிர இதுவரையிலும் அதற்கான எந்த அறிவிப்புகளும் தமிழக அரசு வெளியிடவில்லை. பிரீமியம் செலுத்துவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் நிலுவையில் உள்ள நிலையில் இதுகுறித்து தமிழக. முதலமைச்சர் உடனடியாக காப்பீடு செய்வதற்கான அனுமதி வழங்கி உரிய கால நீட்டிப்பு வழங்கி பிரீமியம் செலுத்த அனுமதிக்க வேண்டும். காப்பீடு திட்டம் என்பது கலைஞர் அவர்களால் 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதனை திமுக தலைமையிலான அரசு இரண்டாவது ஆண்டாக அபகரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,500 தருகிறோம் என்று சொன்னீர்கள். இதுவரையிலும் இரண்டாவது ஆண்டாக ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள்.  உடனடியாக செப்டம்பர் 1 முதல் குவிண்டால் 1 க்கு ரூபாய் 2500 கொடுத்து கொள்முதல் செய்ய முன் வர வேண்டும். 




தமிழகம் முழுமையிலும் மிகப் பெரிய அளவில் உர விற்பனையில் குளறுபடிகள் தொடர்கிறது. ஸ்பிக் நிறுவனம் ஒரு மூட்டை யூரியா 270 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விட்டு அதோடு இணை இடுபொருளாக 730 ரூபாய் கொடுத்து ஒரு மூட்டை வாங்க வேண்டும் என்று கட்டாயம் செய்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்து 1 மூட்டை யூரியா வாங்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரசு கண்டுகொள்ள மறுக்கிறது. பல கட்டங்கள் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்காத நிலை தொடர்கிறது. இதனால் விவசாயிகள் திகைத்துப் போய் உள்ளனர். சம்பா சாகுபடியை துவக்க முடியுமா? என்கிற அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 


எனவே உடனடியாக தமிழக அரசு ஸ்பிக் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள் விரும்பும் உரத்தை அரசு நிர்ணயித்த விலையில் வழங்க வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரப்பத சதம் 21 ஆக உயர்த்தி நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி முன் கூட்டி பெற வேண்டும் தடை இல்லாமல் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி முதலமைச்சருக்கு கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பி வைத்துவிட்டு, காப்பீடுக்கான அனுமதி கிடைக்கிற வகையிலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என அமர்ந்திருக்கிறோம் என்று கூறினார். இந்த காத்திருப்பு போராட்டத்தில்  100 க்கும் மேற்பட்ட மாவட்டம் முழுவதுமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர் குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண