திருவாரூர் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை. விவசாயிகள் கவலை.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நாளை நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் சாத்தனூர் அணை, இளையான்குடியில் தலா ஆறு சென்டிமீட்டரும், ஒகேனக்கல் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதன் காரணமாக இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் இன்று மதியம் முதல் திருவாரூர் மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்த நிலையில், இன்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நன்னிலம், ஆண்டிபந்தல், பூந்தோட்டம், கொரடாச்சேரி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து சில தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மிகுந்த பாதிப்பு அடையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தற்பொழுது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விதை தெளித்து இருக்கும் நிலையில், தற்பொழுது பெய்த மழை சம்பா பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் விவசாயிகள் கவலையும் மகிழ்ச்சியும் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.