ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறலாம்

 

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலமாக  விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எப்பொழுது வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து அங்கு அதிகாரிகள் வழங்கும் சான்றிதழை வைத்துக்கொண்டு விவசாயிகள் கடன் பெறலாம் என்ற அறிவிப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.



திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் விற்பனை குழு கட்டுப்பாட்டில் திருவாரூர், பூந்தோட்டம், வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி, வடுவூர், திருத்துறைப்பூண்டி, மற்றும் கொரடாச்சேரி, ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

 

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து அறுவடை பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆகையால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இருப்பு வைக்க மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, மற்றும் வடுவூர் பகுதியில் இயங்கிவரும் விற்பனை கூடங்களில் நவீன கிடங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்ய உள்ள நெல்லினை இருப்பு வைத்து அதிகபட்சமாக மூன்று லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். விவசாயிகளின் விளை பொருள் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்  அதிகபட்சமாக 180 நாட்கள் வரை விலை பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம் என்ற நிலையில் இதில் முதல் 15 நாட்களுக்கு விவசாயிகள் வாடகை செலுத்தத் தேவையில்லை.



மேலும் பொருளீட்டு கடன் தொகைக்கு குறைந்த பட்சம் 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரை கடன் வழங்கப்படும் நிலையில், இந்த தொகைக்கு 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் களான மன்னார்குடி 9943172177, திருத்துறைப்பூண்டி 9677870366, விற்பனைக் கூட மேற்பார்வையாளர் வடுவூர் 8072033110 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.