வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழையின் காரணமாக கோடை சாகுபடியான பருத்தி, உளுந்து பயிர், எள், நிலக்கடலை, உள்ளிட்ட சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 40 ஆயிரத்து 695 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது பருத்தி பயிரிடப்பட்டு 40 நாட்கள் ஆன நிலையில் இலை வைத்து நன்றாக வளர்ந்து வந்த நிலையில் எதிர்பாராவிதமாக பெய்த கனமழையின் காரணமாக பருத்தி வயலில் முழுவதுமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பருத்தி அழுக கூடிய நிலை உருவாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை, கமலாபுரம், வடபாதிமங்கலம், ராயநல்லூர் திருத்துறைப்பூண்டி வலங்கைமான் ஆலத்தம்பாடி சேந்தங்குடி புள்ளமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உளுந்து பயிர் சாகுபடி ஏப்ரல் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டது இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன அதுமட்டுமன்றி அறுவடை நேரத்தில் சம்பா நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமல் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்திருந்தனர்
இதனிடையில் பணப் பயிரான பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் தற்பொழுது பெய்த கனமழையின் காரணமாக பருத்தி சாகுபடி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு ஏக்கருக்கு இதுவரை பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் செலவு செய்த பணம் அனைத்தும் கைக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மழை தொடர்ந்தால் ஒட்டு மொத்த பருத்தி சாகுபடியும் பாதிக்கும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பருத்தி சாகுபடியில் தற்பொழுது பூ வைக்கும் நேரத்தில் இந்த மழை பெய்து வருவதால் பருத்தி பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.