தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 345 ஏக்கர் பரப்பளவில் கோடைக்கால சாகுபடியாக செய்யப்படும் மானாவரி பயிர்களான பயிறு உளுந்து சாகுபடி செய்ப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. 50% பயிறு உளுந்து அறுவடை பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் மழை காரணமாக அறுவடைக்காக பறிக்கப்பட்ட பச்சை பயிறு வகை செடிகள் வயலிலேயே மூடி வைக்கப் பட்டிருந்தன இவற்றில் பாதி அழுகியும், மீதம் செடியிலேயே முளைத்தும் காணப்படுவதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் கோடை கால பயிர்களான பயிறு உளுந்து பயிரிடுவதற்கு லேசான ஈரப்பதம் மட்டுமே தேவை என்பதால் இதனை விவசாயிகள் கோடை கால பயிர் வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.அதற்கு அதிகளவு தண்ணீர் தேவையில்லை என்பதால் கோடை காலத்தில் இந்த பயிர் வகைகளை காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டாவது வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட ஆவன செய்ய வேண்டுமென விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.