திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.


தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் என்பது அதிகரித்து வருகிறது. அதனை அடுத்து தமிழக சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக இன்புலுயன்சா என்கிற வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருவதாகவும் இதன் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 5 சிறுவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி நாகூர் மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.




திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிறியவர்களுக்கு என தனி காய்ச்சல் பிரிவும் பெரியவர்களுக்கு என தனி காய்ச்சல் பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று வெளிநோயாளிகள் பிரிவிலும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு என தனி தனி அமைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பது குழந்தைகளுக்கு மத்தியில் வேகமாக பரவி வந்தது. திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். 




இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியத்தை சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் மன்னார்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதேபோன்று பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பள்ளி மாணவன் பயிலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசோதனை நடத்த மருத்துவ குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுக்கள் நன்னீரில் தான் உருவாகின்றன. எனவே வீடுகளை சுற்றியும் நீர்  தேங்காமலும் நீரை மூடி வைத்தும் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தனித்தனி காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பத்து படுக்கைகள் கொண்ட காய்ச்சலுக்கான தனிமைப்படுத்துதல் பிரிவு என்பது தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் மற்ற நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுத்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.