கடன் தருவதாக கூறி செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி பெண்ணிடம் ரூ.3.30 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக தஞ்சை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பந்தங்காடு பகுதியை சேர்நத இளம் வயது பெண் ஒருவர் தனியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் உங்களுக்கு குறைந்த வட்டியில் ரூ. 2 லட்சம் கடன் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தகவல் அறிய குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


 





இதையடுத்து அந்த இளம்பெண் மெசேஜில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் உங்களுக்கு ரூ.2 லட்சம் கடன் தொகை கிடைக்கும். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண் பல தவணைகளில் அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ.3.30 லட்சம் வரை செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு கடன் தொகை வரவில்லை.  பணம் தன்னுடைய வங்கி கணக்கிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அந்த பெண் மர்மநபரின் செல்போன் எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தொடர்ந்து பல நாட்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பார்த்துள்ளார். ஆனால் சுவிட்ச் ஆப் என்றே வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் தஞ்சை சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






கவரிங் நகையை தங்க நகை என்று கூறி விற்க முயன்ற பெண்கள்




 


தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் கெலன்(29). சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களிடம் இருந்த கவரிங் நகையை ஜஸ்டின் கெலனிடம் இது தங்கநகை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் சந்தேகம்  அடைந்த ஜஸ்டின் கெலன் தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இரண்டு பெண்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்கள் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்த மகேஷ்வரி (30), லலிதா (25) என்பதும், கவரிங் நகையை தங்க நகை என்று கூறி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மகேஷ்வரி, லலிதா இருவரையும் கைது செய்தனர்.