திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் புகழ்மிக்க எல்லை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் எல்லை தேர் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கோவிலில் பங்குனி உற்சவம் கடந்த 28ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்த தேர் பவனியில் மற்ற தேர்கள் போன்று வடம் பிடித்து இழுக்காமல் பக்தர்கள் தங்கள் தலையில் வைத்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வயல் வழியே சென்று ஊர் எல்லையை சுற்றி வந்து ஆலயத்தை அடைந்தனர். பக்தி பரவசத்துடன் தூக்கி பவனி வருகின்றனர். தேரை தலையில் தூக்கி செல்வதால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் எல்லை பகுதியான வயல்வெளிகளிலும் தூக்கி செல்வதன் மூலம் விவசாயம் செழிப்பதாகவும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்
இதேபோன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பண்டாரவாடை திருமாளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அச்சம் பிள்ளையார், ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன், ஸ்ரீ அஷ்டாதசபூஜ மகாலட்சுமி, ஸ்ரீ பிரஹன் நாயகி, ஸ்ரீ அய்யனார், மற்றும் அதன் பரிவார ஆலயம் ஆகிய 5 கோயிலில் ஒரே நேரத்தில் அஷ்டப்பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் 6 கால யாக பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க மகா பூர்ணாகிதி நடைபெற்றது. மேலும் மேலதாலங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தில் வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து கோபுரத்திற்கு வலம் வந்து 10.15 மணி முதல் 11.30 வரை 5 கோவிலுக்கு ஒன்றன் பின் ஒன்றாக புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் நன்னிலம் மற்றும் பேரளம் பேரூராட்சிகளை சேர்ந்த ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோன்று தேரோட்டம் மற்றும் கும்பாபிஷேகம் நிகழ்வுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுகாதாரமான குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டிருந்தன. மேலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கி வந்தனர். மேலும் கும்பாபிஷேகம் நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காகன நடவடிக்கையை காவல் துறை மூலமாக எடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.