திருவாரூர் மாவட்டம் ஈ.வி.எஸ் நகர் பகுதியில் வசித்து வரும் 53 வயதான பாலாஜி என்பவர் ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்று அதன் மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவர் தனது ஓய்வூதியத்தை திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பேங்க் ஆப் பரோடாவில் இருந்து மாதந்தோறும் பெற்று வருகிறார். இந்த நிலையில் பாலாஜியின் மகள் ஆஷிகா தனது பொறியியல் படிப்பிற்காக இந்த கிளையில் கடன் பெற்றுள்ளார். 2017-18 ஆம் ஆண்டு ஆஷிகா பொறியியல் படிப்பை முடித்து தற்சமயம் வேலைக்காக காத்திருக்கிறார். இந்தநிலையில் கல்விக் கடன் செலுத்த அளிக்கப்படும் ஒரு வருட காலக் கெடு முடிவதற்குள் பாலாஜியின் வங்கி கணக்கில் இருந்து அவரது மகள் ஆஷிகா கல்விக் கடனுக்காக எந்தவித முன்னறிவிப்புமின்றி 23 ஆயிரத்து 4 ரூபாயை பரோடா வங்கி பிடித்தம் செய்து உள்ளது. இதுகுறித்து வங்கியில் பாலாஜி கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆஷிகாவின் கல்விக் கடனை வாராக்கடன் என பேங்க் ஆப் பரோடா வங்கி அறிவித்துள்ளது. வாராக் கடனாக அறிவித்த பின்பு தான் பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறை என்று கூறப்படுகிறது. ஆனால் வங்கி தரப்போ ஆசிகாவின் தந்தை கணக்கில் இருந்து பணத்தை பிடித்த பின்பு ஆஷிகாவின் கல்வி கடனை வாராக் கடனாக அறிவித்துள்ளது. இதனையடுத்து பாலாஜி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி பாலாஜிக்கு வங்கி தரப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூபாய் 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 23 ஆயிரத்து 4 ரூபாயை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்த நாளிலிருந்து 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும், மேலும் அவரது வழக்கு செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அதிரடி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.
இந்த இழப்பீடு தொகை மற்றும் வங்கி கணக்கு கண்டுபிடிக்கப்பட்ட தொகை ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் பாலாஜிக்கு பாங்க் ஆப் பரோடா வங்கி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த தொகையினை வங்கி 6 வார காலத்திற்குள் பாலாஜிக்கு வழங்க தவறும் பட்சத்தில் அந்த நாளிலிருந்து 6 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்