மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்துக்கு உட்பட்ட மாணிக்கபங்கு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். வயது 68. விவசாயியான இவர் தனது வீட்டிற்கு அருகே நேற்று விஷம் அருந்தி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இறந்த கோவிந்தராஜிடம் இருந்து கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், தனக்கு சொந்தமான 27 சென்ட் இடத்தினை கடந்த 2015- ம் ஆண்டு மாணிக்கபங்கு வள்ளுவர் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம் சென்ட் 7 ஆயிரம் ரூபாய் என்று விலைபேசி ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிகொண்டு ஓர் ஆண்டு காலத்திற்குள் பாக்கி பணத்தை கொடுத்துவிட்டு இடத்தினை கிரயம் செய்து கொள்வது என்று ஒப்பந்தம் பத்திரம் செய்து கொண்டோம் .
அதன்பிறகு பல முறை அவரது மகன் சோமசுந்தரத்திடம் கூறியும் அவர்கள் மீதம் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சோமசுந்தரம் இடத்தினை கிரயம் செய்துகொடுங்கள் என்று கேட்டார். அதற்கு அக்ரிமென்ட் போட்டு காலாவதியாகி விட்டது. அப்போது விற்ற விலை வேறு. தற்போது அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதனால் தற்போது சந்தை விலைக்கு பணம் கொடுங்கள். இல்லை என்றால் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கோவிந்தராஜ் கூறினார். அதன்பிறகு திடீரென்று சோமசுந்தரம் தனது இடத்தில் கொட்டகை போட்டடுள்ளார். இடம் கிரயம் செய்து கொடுக்காமல் எப்படி கொட்டகை அமைக்கலாம் என்று கூறி பஞ்சாயத்தில் முறையிட்டபோது, இதுகுறித்து ஊர் பஞ்சாயத்தார்கள் பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர்.
மார்ச் மாதம் ஊர் பஞ்சாயத்திற்கு சென்றபோது என்னை மிரட்டி, அச்சுறுத்தி 20 லட்சம் ரூபாய் விலைபோகும் இடத்தினை 4 லட்சம் ரூபாய்க்கு குறைந்த விலைக்கு நிலத்தை விற்பனை செய்வது என்று எழுதி வாங்கி கொண்டனர். இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது இடத்தில் போடப்பட்ட கொட்டகையை அகற்றி இடத்தை காவல்துறையினர் மீட்டுக்கொடுக்க வேண்டும். இந்த கடித நகல் ஒன்றை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜ் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பொறையார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்