நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. ரத்த காயங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பானது.

 

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மீனவ கிராமத்தினை நிர்வாகம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட பஞ்சாயத்தார்கள் ஊர் வரவு செலவு கணக்கினை முறையாக தாக்கல் செய்யவில்லை என புகார் எழுந்தது. இதனால் இரு பிரிவினருக்கு இடையே கடந்த ஆறு மாத காலமாக மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று வரவு செலவு தாக்கல் செய்யும் கூட்டம் நடைபெற்ற நிலையில்  இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

தொடர்ந்து வாக்குவாதம் மோதலாக மாறவே இரு பிரிவினரும் அரிவாள் கட்டை கற்கள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜெகநாதன், கிருஷ்ணமூர்த்தி, சௌந்தரராஜன், கலைவாணி, ராமன் மற்றொரு தரப்பை சேர்ந்த , சத்தியமூர்த்தி, கௌவுசன், சேகர் ஆகியோர் படுகாயமடைந்து நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திமுக கவுன்சிலரின் கணவரும் மாவட்ட அறங்காவலர்களின் குழு தலைவருமான நாகரத்தினம் மோதலுக்கு காரணமென கூறி ஒரு தரப்பினர் நாகூர் பாலத்தடியில் இரத்த காயங்களுடன் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

தொடர்ந்து நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர். மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவு பேரில் இரு தரப்பைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரிடம் நாகூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.