உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர் கட்டுமானப்பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.


மன்னார்குடி மதிலழகு, வேதாரண்யம் விளக்கு அழகு, திருவாரூர் தேரழகு என்பார்கள். அதே போல் திருவாரூர் ஆழித் தேர் அசைந்தாடி வரும் அழகை காண கண் ஆயிரம் வேண்டும், சைவ சமய மரபில் பெரிய கோயிலாகும். பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சமயக்குரவர்கள் நால்வரால் போற்றி பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் ஆகும். இந்த கோயில் 16.22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மூன்று பிரகாரங்களும், 9 கோபுரங்களும், 11 மண்டபங்களையும், 114 சிவலிங்கத் திருமேனிகளையும், 54 விநாயகர் திருமேனிகளையும் கொண்டுள்ளது.




தமிழகத் திருக்கோயில்களில் மிகத் தொன்மையானதும் தோன்றிய காலம் கூற முடியாத அளவு பெருமை பெற்றது. திருநாவுக்கரசர் பாடும் சிறப்புபெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலிலும் அதோடு இணைந்த ஆழித்தேர் ஆகும். தமிழகத்தில் உள்ள தேர்களில் திருமுறையில் பாடப் பெற்ற பெருமை இத்திருக்கோயிலின் தேருக்கு மட்டுமே உள்ளது. இதர திருக்கோயில்களின் தேர்களில் இருந்து இத்தேர் முற்றிலும் மாறுபட்டது. 31 அடி உயரம் கொண்ட இத் தேர் கட்டுமானத்தில் இரண்டு இரும்பு அச்சுக்களில் 9 அடி விட்டமும், ஒன்றரை அடி அகலமும் உடைய நான்கு இரும்பு சக்கரங்களின் மேல் வர்ணிக்க இயலாத கலை பொக்கிஷமான சிற்பங்களுடன் அமைந்துள்ளது.  அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடி அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை 350 டன் தேரின் முன்புறம் தேரினை இழுத்துச் செல்வதுபோல் பாயும் அமைப்பில் உள்ள பிரம்மாண்டமான 32 அடி நீளம் 11 அடி உயரமுடைய நான்கு குதிரைகள். தமிழர்களின் கலை நயத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது.




இந்த ஆழி தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதிநாயனார், ஏனாதி நாயனார், காரைக்கால் அம்மையார் போன்ற அறுபத்திமூன்று நாயன்மார்களின் பிராண சிற்பங்களும், பெரிய புராணம் மற்றும் சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவ புராண காட்சிகள் மரத்தில் புடைப்பு சிற்பங்களாக தேரின் மூன்று நிலை கொண்ட அடிப்பாகத்தில் வடிவமைக்கப்பட்டு இருப்பது தேரின் பேரழகு. குறிப்பாக தேரோட்டத்தை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். அதனை ஒட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஆழித் தேரோட்டம் வருகிற 15-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர் கட்டுமானப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.