தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. அதனை அடுத்து ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வுகள் அதிகரித்து ஊரடங்கை வருகிற 5ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், குடவாசல் அரசு மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 671 நபர்கள் அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 320 நபர்கள் இதுவரை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 73 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரத்தில் வீட்டில் அவர்கள் மேலும் 15 தினங்களுக்கு தனிமையில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் இதுவரை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாகவும், மேலும் மாவட்டத்தில் உள்ள மக்கள் தற்போது அளித்து வரும் ஒத்துழைப்பை தொடர்ந்து நீடித்தால், திருவாரூர் மாவட்டம் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாகும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.