திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பம் கடி மருத்துகாரத் தெருவில் வசிக்கும் 60 வயது மூதாட்டி மலர்க்கொடி. இவர் தனது வீட்டின் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். அவரது மகன் செந்தில்குமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மேல் வீட்டில் வசித்து வருகிறார். செந்தில்குமார் வீட்டிற்கு அருகிலேயே வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில்  விடியற்காலையில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் இரும்பு ராடால் மலர்க் கொடியை கடுமையாக தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த  இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். மலர்கொடியின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் செந்தில்குமார் மேல் வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்தபோது தலையில் இரும்பு ராடு தாக்கியதில் பலத்த காயமடைந்து மலர்கொடி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 




இந்த நிலையில் மூதாட்டியை தாக்கி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் நன்னிலம் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வாளர் சுகுணா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் மூதாட்டியின் மகன் செந்தில்குமார் நண்பர் குடவாசல் பகுதியைச் சேர்ந்த வினோத் (35) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கச்சங்கிலியை பறிப்பதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது கணவனை இரும்பு ராடால் தாக்கி மனைவியிடமிருந்து 12 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்யபட்டிருந்த நிலையில் அந்த சம்பவம் நடந்து ஓரிரு தினங்களில் தற்போது மீண்டும் மூதாட்டியை தாக்கி தங்கச் சங்கிலி பறித்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இரவு நேர ரோந்து வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும் மேலும் கிராமப்புறங்களில் அதிக அளவில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டால் இதே போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க முடியலாம் என பொதுமக்கள் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.