தஞ்சாவூர்: தஞ்சை அருகே ரெட்டிப்பாளையத்தில் நடந்து வரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், அதே நேரத்தில் தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார். இப்பணிகள் 52 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.



தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.248.67 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தஞ்சை ரெட்டிபாளையம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் நடந்து வருவதை இன்று திருவையாறு எம்எல்ஏ., துரை. சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நீர்த்தேக்க தொட்டியில் ஏறி நின்று பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டார்.

அப்போது அவரிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் நடந்து வரும் பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர் ஆகியோர் விளக்கமாக விவரித்தனர். அப்போது எம்எல்ஏ., துரை. சந்திரசேகரன் இந்த பணிகளை விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தரமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் திருச்சென்னம்பூண்டி ஊராட்சி அருகில் கொள்ளிடம் ஆற்றில் புதிய நீர் சேகரிப்பு கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தோகூர் ஊராட்சி அருகில் காவிரி ஆற்றில் புதிய நீர் உறிஞ்சு கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் 16.78 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு அகரப்பேட்டை ,கடம்பக்குடி, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட உள்ள முறையை 2.05, 2.70 மற்றும் 4.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையங்கள், நந்தவனப்பட்டி கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையம் மூலம் 190.715 கி.மீ. நிலத்திற்கு நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு 72 தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட உள்ளது.

தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து 255.91 கி.மீ. நீளம் குழாய்கள் பதித்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 305 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள 23 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டமானது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. தற்போது வரை 52 சதவீதம் அளவிற்கு பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி (தெற்கு), முரசொலி (வடக்கு), உலகநாதன் (மேற்கு ), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ராகவேந்திரா, நகர்கிளை செயலாளர் புண்ணியமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.