தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு புகழ் தியாகராஜ சுவாமி ஆராதனை விழா என்றால் மற்றொரு புகழ் திருவையாறு அசோகாதான். தஞ்சை தயார் செய்யப்படும் அசோகா., அல்வா ோன்று இருக்கும் இதை வெளிநாடடினரும் விரும்பி சாப்பிடுகின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருவையாறு புகழ் கிரீடத்தில் மற்றொரு வைரம்
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி பிற மாவட்ட, மாநில சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதே போல் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பெரிய கோயிலுக்கு வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் திருவையாறுக்கும் செல்கின்றனர். இப்படி திருவையாறுக்கு செல்பவர்கள் மிகவும் விரும்பி வாங்குவது நம்ம ஊரு ஸ்பெஷலான அசோகாவை தான். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை என்பதை போல் திருவையாறு என்றாலே அசோகா தான்.
வெளிநாட்டிற்கும் பறக்கும் அசோகா
திருவையாறு வந்து சென்றதன் அடையாளமாக இந்த இனிப்பு வகையை வாங்கி செல்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். திருவையாறு ஸ்பெஷல் என்றால் அது தியாகராஜர் ஆராதனை விழா, ஐயாறப்பர் கோயில் என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் அந்த வகையில் திருவையாறு அசோகாவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளது வெளிநாட்டில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் இதை வாங்கி அனுப்புகின்றனர் என்றாலே தெரிந்து விடும் இதனோடு ருசி.
காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆகிய ஐந்து ஆறுகள் ஓடுவதால் இந்த பகுதியை திருவையாறு என்று அழைத்து வருகின்றனர் என்கின்றனர். இந்த ஊரில் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐயாறப்பர் கோயில் பிரசித்தி பெற்றது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜர் வாழ்ந்து, முக்தி பெற்ற ஊர் இது. அவரது சமாதியில் ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இச்சிறப்புகளின் வரிசையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனைவரது நினைவிலும் இருக்கும் திருவையாறு அசோகாவும் ஒன்று.
தன்னிகரற்ற ருசி கொண்டு விளங்குகிறது
இத்தனை புகழ்பெற்ற இந்த அசோகாவை செய்வதற்குப் பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், மைதா மாவு, பால்திரட்டு, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இருந்தால போதுமாம். இத்தனைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அசோகாவின் தன்னிகரற்ற ருசிக்கு மிக முக்கியமான காரணம் காவிரி நீர்தான்., வேறு ஊர்களில் அசோகா தயாரிக்கப்பட்டாலும், திருவையாறு அசோகாவுக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்ற பெருமையும் இதற்கு உண்டு.
திருவையாறு வருபவர்கள் தேடி வந்து வாங்கும் சிறப்பு
இந்த அசோகாவின் பிறப்பிடமே திருவையாறுதான். இங்குள்ள ஐயாறப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு வரும் இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் தேடுவது அசோகாவைத்தான். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களெல்லாம் திருவையாறு அசோகாவை மறப்பதில்லை. தங்களுக்கு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்களுக்கும் சேர்த்து வாங்கிச் செல்லும் அளவுக்கு இதன் ருசியும், புகழ் பரவியிருக்கிறது. திருவையாறு அசோகாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது தியாகராஜ ஆராதனை விழாதான். இந்த விழாவுக்கு உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் அனைவரும் தவறாமல் திருவையாறு அசோகா இனிப்பை வாங்கிச் சென்று மிகவும் பிரபலப்படுத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அசோகான்னா அது திருவையாறுதான். என்னங்க திருவையாறுக்கு அசோகா வாங்க புறப்பட்டு விட்டீங்களா?