தஞ்சாவூர்: தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து தி.மு.க வேட்பாளர் சண். ராமநாதன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். இது மக்கள் மனதை கவர்ந்தது. தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்.ராமநாதன் தொகுதி முழுவதும் வலம் வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் வேட்பாளர் சண். ராமநாதனை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாகமாக  வரவேற்று வருகின்றனர்.  இந்நிலையில் வேட்பாளர் சண் .ராமநாதன் காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர் அவர் காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

Continues below advertisement

அப்போது வேட்பாளர் சண் ராமநாதன் பேசும்போது, குடிநீர் பிரச்சனை எதுவுமே இல்லாத தஞ்சாவூரை உருவாக்கியிருக்கிறோம். காமராஜ் மார்க்கெட் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு வந்தபோது முதல்வர் நன்றாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறும் போது மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் அறிவித்த அனைத்து திட்டமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. தஞ்சாவூர்ல மின்விளக்காக இருக்கட்டும், குப்பை அள்ளுவதாக இருக்கட்டும் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் மக்களை தேடி நாங்கள் செல்லும்போது உங்களுக்குத்தான் இந்த முறை ஓட்டு போடப்போறோம்.

Continues below advertisement

காரணம் அந்த அளவுக்கு தஞ்சாவூரில் நலத்திட்டங்கள் செய்து சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள். இந்திய அளவுல முதலிடத்தை பிடிச்சு வெற்றி பெற்றீங்க. அதனால உங்களுக்குத்தான் இந்த முறை உதயசூரியனுக்குத் தான் ஓட்டு. 2வது முறை தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்று நம்மிடம் உறுதியாக கூறுகிறார்கள். தஞ்சாவூரில் டைட்டல் பார்க், போக்குவரத்து நெரிசலை போக்கும் ஹைட்ராலிக் கார் பார்க்கிங், புனரமைக்கப்பட்ட ராஜப்பா பூங்கா, மக்கள் தேடி மருத்துவம், சிவகங்கை பூங்கா, ரவுண்டாக்கள் சீரமைப்பு, முழுமையான சாலைப்பணிகள், குப்பைககள் அகற்றம் என நிறைய விஷயங்களை சிறப்பாக செய்துள்ளோம். 

முதல்வரிடம் மீண்டும் நாங்கள் கேட்டபோது பெரிய டைட்டல் பார்க் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். புற்றுநோய் மருத்துவமனை மிகப்பெரிய அளவுல கட்டி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி பல திட்டங்கள் வர உள்ளது. இப்போது தஞ்சாவூர் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. வர்த்தகம் செழிப்பாக நடந்து வருகிறது.

மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன் என்றார் .

தொடர்ந்து வேட்பாளர் சண்.ராமநாதன் வடக்கு வீதி, கீழராஜ வீதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் மாலை தஞ்சை பிள்ளையார்பட்டியில் பிள்ளையார் கோயிலில் இருந்து வேட்பாளர் சண் ராமநாதன் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பிள்ளையார்பட்டி வடக்கு தெரு, பிள்ளையார்பட்டி மெயின் ரோடு, எல்லையம்மாள் காலனி, சிந்தாமணி, சோழன் நகர், பர்மா காலனி, திருவள்ளுவர் நகர், பூக்கொல்லை ஆகிய பகுதிகளில் சிறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.