தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ,  மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


2023- 24ஆம் கல்வி ஆண்டில், பள்ளி ஆண்டுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. இதை எடுத்து வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் பள்ளிகள் இன்று (10ம் தேதி) திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.




மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு


தொடர்ந்து இன்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அந்த வகையில் தஞ்சாவூர் தென்கீழ் அலங்கம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ,  மாணவிகளுக்கு ரோஜாப்பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.


மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வரவேற்றார்


மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்களை கொடுத்து ஆர்வமுடன் பாடங்களை கற்று முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கி வரவேற்றார். இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேலு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ மாணவிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர்.


கலெக்டர் தீபக் ஜேக்கப் பாடப்புத்தகங்கள் வழங்கினார்


இதையடுத்து இப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் தீபக், ஜேக்கப் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். பின்னர் பள்ளியில் அமைந்துள்ள நவீன கணினி ஆய்வகத்தை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் அவரவர் வகுப்பறைகளுக்கு வரிசையில் சென்றனர்.


மாணவ, மாணவிகள் உற்சாகம்


இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரிய, ஆசிரியைகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், மாணவிகளுக்கு புத்தகம் நோட்டு வழங்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளில் மேயர் உள்ளிட்டவர்கள் வரவேற்பு கொடுத்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வகுப்பறைகளுக்கு சென்றனர்.