தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கல்விராயன்பேட்டை பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி பயிர்களுக்கு உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டித்வா புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் விவசாயப்பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீரில் இளம் சம்பா, தளாடி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர். இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, 8 நம்பர் கரம்பை, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் இந்த மழை சம்பா, தாளடி பயிர்களுக்கு பயன் உள்ளதாக அமைந்தது. ஒரு சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில் முன்கூட்டியே நடவுப்பணிகள் நிறைவடைந்ததால் பயிர்கள் வளர்ச்சிக்கு இந்த மழை உதவியதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தற்போது இப்பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தாலும் கனமழை இல்லை. இதனால் விவசாயிகள் களைப்பறித்தல், உரம் தெளித்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்ததால் வயல்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், வளர்ந்து வரும் பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் உரம் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூச்சி தாக்குதலை தடுக்கும் வகையிலும் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை அருகே கல்விராயன்பேட்டை பகுதியில் வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கும் பணிகளில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கையில், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் பாதிக்கப்படும் என்பதால் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளை ஈடுபட்டுள்ளோம். மாலை வேளையில் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடாது என்பதால் மதியத்திற்குள் முடிக்க வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறோம். மேலும் பயிர்கள் நன்கு செழித்து வளர பல பகுதிகளில் உரம் தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.