புத்தாண்டில் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும்போது, அவர்களுக்கு அணிவித்து கவுரவிப்பதற்காக பயன்படும் சந்தன மாலைகள் தஞ்சாவூரில் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாலை என்றவுடன் மலர்களால் தொடுக்கப்படும் மாலை தான் உடனே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.


ஆனால் சந்தனமாலை, ஜவ்வாது மாலை, ஏலக்காய் மாலை, கிராம்பு மாலை, நெல்மணி மாலை என பல்வேறு வகையான மாலைகள் உள்ளன. பல வண்ண மலர்களைக் கொண்டு மாலை தொடுத்தாலும், அந்த மாலைகள் அடுத்த நாள் வாடி வதங்கிவிடும். ஆனால் சந்தன மாலைகள் காலத்துக்கும் வாடாமல் இருக்கும். அதனால் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில், முக்கிய பிரமுகர்களை சந்திக்கும்போது, அவர்களை கவுரவிக்க சந்தன மாலைகளை அணிவிப்பது வழக்கமாக உள்ளது.


இந்த சந்தன மாலைகள் 2 சரங்களில் தொடங்கி 20 சரங்கள் வரை தொடுக்கப்படும். ஒரு சந்தன மாலை அதிகபட்சமாக ரூ.1,000 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. சந்தன மாலை தயாரிக்க வம்பாரை என்ற ஒரு மரத்தின் துகள் தான் மூலப்பொருள். இந்த மரத்தின் துகள்களை கொண்டு அதை மாவாக்கிய பிறகு அதனோடு ஒரு பிசினையும் சேர்த்து பக்குவமாய் பிசைந்து, அதை சின்ன உருண்டைகளாக உருட்டி அதில் ஒரு சிறிய துவாரமிட வேண்டும். துவாரமிட்ட உருண்டைகளை பதமாக காய வைத்து பிறகு அதனை சந்தன பவுடரில் நனைத்து மாலையாக தொடுக்கப்படுகிறது.


சந்தன மாலைகளில் பெரும்பாலானவை தஞ்சையை அடுத்த தண்டாங்கோரை கிராமத்தில் உள்ள கைவினை கலைஞர்களால் தொடுக்கப்பட்டு வருகின்றன. புத்தாண்டு நெருங்கி வருவதால் சந்தன மாலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து சந்தன மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்கள் தரப்பில் கூறுகையில்,  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்துபவர்கள் சந்தனமாலையை வாங்கி செல்வார்கள். வழக்கமாக மாத இறுதி நாட்களில் சந்தன மாலை விற்பனை அதிகமாக இருக்கும். புத்தாண்டு தினத்தன்று முக்கிய பிரமுகர்களை சந்திக்கும்போது அவர்களுக்கு அணிவிக்க சந்தன மாலையை அதிகம்பேர் வாங்கி செல்வார்கள்.


சந்தனமாலை விற்பனை நன்றாக தான் இருக்கிறது. ஆனால் இந்த மாலை தொடுப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதால் லாபம் மிக குறைவாக தான் இருக்கிறது. நாங்கள் மொத்தமாக சர்வோதய சங்கம், காதிபவன் நிறுவனங்களுக்கு சந்தனமாலையை அனுப்பி வைக்கிறோம். நாங்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை சந்தன மாலையை விற்பனை செய்கிறோம். முன்பு குடிசை தொழிலாக சந்தன மாலை தொடுக்கும் பணியில் பெண்கள் அதிகம் பேர் ஈடுபட்டு வந்தனர்.


ஆனால் இப்போது 100 நாள் வேலை திட்டத்திற்கு எல்லோரும் செல்வதால் சந்தன மாலை தொடுப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஏனென்றால் சந்தன மாலை தொடுக்க வழங்கப்படும் ஊதியத்தை விட 100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.