தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம் குருங்குளம் மேற்கு கிராமம், திருக்கானூர்பட்டி ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று பார்வையிட்டார். 


குருங்குளம் மேற்கு கிராமத்தில் 24 ஏக்கர் பரப்பளவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத் தொகுப்பு-5ல் 12 விவசாயிகளுக்கான நிலத்தில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார்.


அப்போது விவசாயிகள் சசிகுமார், செல்வராஜ், சிவகாசி கூறியதாவது: வானம் பார்த்த பூமியாக இருந்த எங்கள் நிலத்தில் 24 ஏக்கர் அளவிற்கு 12 விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரூ.15 லட்சம் செலவில் மோட்டார் கிணறு அமைத்து தந்ததை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலம் முந்திரி பயிரிட்டும். உளுந்து பயிரிட்டும் வேளாண் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறச் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முலமைச்சர் அவர்களுக்கும்., மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி என்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் தெரிவித்தனர். 




இதையடுத்து திருக்கானூர்பட்டியில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் மூலமாக சகாயமேரி என்பவரது நிலத்தில் 1.43 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1,84,568 கடனுதவியில் ரூ.1,38,313 மானியமாக பெற்று சொட்டுநீர் பாசன திட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் செய்தியாளர்களுடன் பார்வையிட்டார்.


அங்கிருந்த விவசாயிகளிடம் வேளாண் துறையில் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு, வேளாண் பணிகளில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்,  கேட்டுக்கொண்டார். 


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் 14 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் சிறப்பு இனமாக சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களை கண்டறிந்து, அதற்கு சொந்தமான விவசாயிகளை குழுவாக அமைத்து, குழுவினை பதிவு செய்து, பங்கு பெரும் விவசாயிகளின் தரிசு நிலங்களில் இருந்த முட்புதற்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டது.


பின்னர் பாசன வசதியை ஏற்படுத்த குழாய் கிணறு அமைக்கப்பட்டு, இலவச மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, மரப்பயிர்கள், பழப்பயிர்கள், பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வேளாண்மை உழவர்-நலத்துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, துணை இயக்குநர்கள் ஈஸ்வர். சுஜாதா, கோமதி தங்கம் (நேர்முக உதவியாளர்), உதவி இயக்குநர் அய்யம்பெருமாள்,. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், வேளாண்மை அலுவலர் தினேஷ்வரன், தோட்டக்கலை அலுவலர் சோபியா, தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ். உதவி அலுவலர்கள் ஞானசுந்தர், வெங்கடாஜலபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.