17 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த ரகுநாத மன்னர், தனது ஆசை மனைவிக்கு, யாரும் வழங்காத ஒரு பொருளை பரிசாக வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆசாரியார் சமூகத்தை கொண்டு  வீணை தயாரித்து வழங்கினார் வீணை

  ஒரு நரம்பு இசைக் கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது.  கி.பி. 17ஆம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில்  வீணை தயாரிக்கப்பட்டது. பலா மரத்தினால் செய்யப்படும் வீணையில்,குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை  பாகங்களாகும்.  வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது.  தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும். 




நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.




வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி  அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார்.தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.இத்தகைய புகழ்பெற்ற வீணை தஞ்சாவூரை தாயகமாக கொண்டு,தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் தஞ்சாவூர் சென்று, இசையை பரப்பி வருவது தஞ்சாவூருக்கே பெருமையாகும்.





இது குறித்து வீணை தயாரிக்கும் சேகர் ஆசாரி கூறுகையில், வீணை என்பது யாழ் என்ற இசைக்கருவியிலிருந்து வந்ததாகும். 17 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த ரகுநாத மன்னர், தனது ஆசை மனைவிக்கு, யாரும் வழங்காத ஒரு பொருளை பரிசாக வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆசாரியார் சமூகத்தை கொண்டு  வீணை தயாரித்து வழங்கினார். எங்களது வம்சத்திலுள்ள மூதாதையர்கள், முன்னாள் நடிகர் தியாகராஜபாகவதரின் சகளையிடம், எனது தாத்தா குப்பா ஆசாரி வீணை தொழிலை கற்று கொண்டார். பின்னர், எனத தந்தையார் கோவிந்தன் ஆசாரி, தொடர்ந்து நான் தயாரித்து வருகின்றேன்.  


வீணை மற்றும் ஒத்து எனும் தம்புரா என இரண்டு வகை உண்டு, 24 தவரம் கொண்ட வீணையில், 7 கம்பிகள் இருக்கும். இதில் 5 இரும்பு கம்பிகளும், 2 பித்தளை கம்பிகள் இருக்கும், தம்புராவில் உள்ள 4 கம்பிகளில் 2 பித்தளையும், 2 இரும்புகம்பிகள் இருக்கும். இக்கம்பிகள் மும்பையிலிருந்து  வரவழைக்கப்படுகிறது. வீணையின் மொத்த எடை 7 கிலோவாகும். உயரம் 52 இன்சாகும். வீணைகளை சுமார் 50 ஆண்டுகள் பழமையான வைரம் பாய்ந்த பலா மரத்தை கொண்டு வந்து, தயாரிக்கப்படுகிறது.  சாதாராண பலா மரம் மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து வரும்  பலா மரத்தில் வீணை செய்ய முடியாது.




ஒரு வீணை செய்ய சுமார் 15 நாட்களாகும். சுமார் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சாவூரை தாயகமாக கொண்ட வீணை, உலக முழுவதுமுள்ள புகழ்பெற்ற இசை கலைஞர்கள் வாசிப்பதால், தஞ்சாவூருக்கே பெருமையாகும்.தஞ்சாவூர் வீணை வெளி நாடு, இந்தியா மற்றும் தமிழகம் முழுவதுமுள்ள  இசை கலைஞர்கள், தஞ்சாவூரில் தயாரிக்கும் வீணையை வாசித்து புகழ்பெற்று வருகிறார்கள். தஞ்சாவூர் வீணையை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா போன்ற தலைவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.எனது தந்தையார் நுாறு ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்த வீணை இன்றும் நல்ல முறையில் பயன்படுத்தி வருவது எங்களின் தொழிலுக்கே பெருமையாகும் என்றார்.