தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் என்றாலே அதிகபட்சம்தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது எதற்காக தெரியுங்களா? மழைதான். அதிராம்பட்டினத்தில்தான் அதிகமாக பெய்துள்ளது.

Continues below advertisement

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் தொடங்கி மழை விட்டு, விட்டுபெய்த வண்ணம் இருந்தது. அதன்படி அதிகபட்சமாக அதிராம்பட்டினம் பகுதியில் 76.20 மி. மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதன் தொடக்க காலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. தஞ்சை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த மழை சம்பா, தாளடி பயிர்களுக்கு உதவிகரமாக அமைந்தது, இளம் நாற்றுகள் செழித்து வளர உதவியது.  

Continues below advertisement

பின்னர் மழை இன்றி வெயில் வாட்டி வதக்கியது. சுள்ளென்று அடித்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதற்கிடையில் காலையில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் பெய்த மழையை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வயல்களை உழுது சம்பா, தாளடி சாகுபடிக்காக தயார்படுத்திக் கொண்டனர். மழை பெய்து வயல் ஈரப்பதமாக இருந்ததால் டிராக்டரை கொண்டும் உழும் பணிகள் எளிதாக இருந்தது. 

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.  இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினம் பகுதியில் 76.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

அதன்படி தஞ்சாவூரில் 21, வல்லத்தில் 9, குருங்குளத்தில் 20, திருவையாறு 24, பூதலூரில் 22.20, திருக்காட்டுப்பள்ளியில் 19.20, கல்லணையில் 20.80, ஒரத்தநாட்டில் 28, நெய்வாசல் தென்பகுதியில் 36.40, வெட்டிக்காட்டில் 28.60, கும்பகோணத்தில் 35, பாபநாசத்தில் 24, அய்யம்பேட்டையில் 28, திருவிடைமருதூரில் 39.40, மஞ்சளாறு 50.20,  அணைக்கரை 25.80, மதுக்கூர் 48.40,  பட்டுக்கோட்டை 52, ஈச்சன்விடுதி 16, பேராவூரணி 25 என மொத்தமாக 649.20 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 30.91 மி. மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பாசனத்திற்காக கல்லணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. காவிரியில் வினாடிக்கு 2805 கன. அடி, வெண்ணாறில் வினாடிக்கு 2800 கன அடி , கல்லணை கால்வாயில் வினாடிக்கு 1518 கன அடி, கொள்ளிடத்தில் வினாடிக்கு 1620 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.