தஞ்சாவூர்: எஸ்ஐஆர் விண்ணப்பத்தால் தமிழகத்தில் இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ என்று கும்பகோணம் மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்ஐஆர் விண்ணப்பத்தை மக்களுக்கு சரியாக கொடுக்கவில்லை என்று கூறி மாநகராட்சி ஆணையர் தரக்குறைவால் பேசியதால் 84 மாத்திரைகள் சாப்பிட்டு அங்கன்வாடி பணியாளர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம்தான் அது. தற்போது கும்பகோணத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தற்கொலை முயற்சி மேற்கொண்ட அங்கன்வாடி பணியாளர் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து பணிகளை புறக்கணித்து அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்.

கும்பகோணம் வட்டம், கொற்கை, துறையூரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி சித்ரா (59), இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர். இவர், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வழிநடப்பு பகுதி மற்றும் ஈவேரா ஆகிய 2 அங்கன்வாடி மையங்களில், அங்கன்வாடி பணியாளராக கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்ஐஆர் விண்ணப்பம் தொடர்பான பணி சித்ராவிற்கு வழங்கப்பட்டது.

Continues below advertisement

இந்நிலையில், நேற்று மாலை, கும்பகோணம் ஆணையர் காந்திராஜ், சித்ராவிடம் நவ.17-ம் தேதி (நேற்று) இரவுக்குள் 200 எஸ்ஐஆர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லை விட்டால், உங்கள் அதிகாரிகளிடம் கூறி சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்றும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த சித்ரா,  இன்று காலை, தனது வீட்டில் இருந்த பல்வேறு வகையான 84 மாத்திரைகளை வீட்டிலும், நாச்சியார் கோவில் வழிநடப்பு மையத்தில் சாப்பிட்டுள்ளார். 

பின்னர் தான் மாத்திரைகளை சாப்பிட விபரம் மற்றும் எதனால் சாப்பிட்ட நேர்ந்தது என்பது குறித்து மற்றொரு மையத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் சித்ரா மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து மற்ற அங்கன்வாடி பணியாளர்கள், சித்ராவை, ஆட்டோவில் ஏற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு வந்தனர். அங்கு சித்ரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்து ஆத்திரமடைந்த மற்ற அங்கன்வாடி பணியாளர்கள் எஸ்ஐஆர் பணிகளை செய்து தர கூறி மிரட்டும் அதிகாரிகளை கண்டித்து கண்டன முழக்கமிட்டு, பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தரக்குறைவாக ஒருமையில் பேசிய ஆணையர் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,  தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் இல்லாவிட்டால் காலவறையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அங்கன்வாடி பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சித்ரா, தனது கையால், தனது குழந்தைகளுக்கு, என்னுடைய இந்த முடிவுக்கு இந்த நிர்வாகமே காரணம் என ஒன்றரை பக்கத்தில் கடிதம் எழுதி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சித்ரா இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் இதுபோன்ற தற்கொலை முயற்சி மேற்கொண்டது மற்ற அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.