Rajendra Cholan : ”போரில் சிங்கம், பாசத்தில் பூனை” ராஜேந்திர சோழனின் இன்னொரு முகம்..!
ராஜேந்திர சோழன் மீது அதிக அன்பு, பாசம், அக்கறை கொண்டு இருந்தவர்தான் பஞ்சவன் மாதேவியார். அதனால்தான் அவரது இறப்பை தாங்க முடியாத ராஜேந்திர சோழன் அவருக்காக பள்ளிப்படை கோயிலை கட்டினார்.

தஞ்சாவூர்: இரும்பு மனசுக்காரனாக அறியப்பட்ட, போர்க்களத்தில் சிங்கமாக கர்ஜித்த ராஜேந்திர சோழன் மிகவும் இளகிய மனதுகாரன் என்பதை யாரும் அறிந்ததில்லை. அதற்கு உதாரணம்தான் இது. தனது சிற்றனையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் ராஜேந்திர சோழன் பள்ளிப்படை கோயில் கட்டிய விஷயம்தான் இது.
ராஜராஜ சோழனின் மனைவிகளுள் ஒருவர்தான் பஞ்சவன் மாதேவியார். இவர் ராஜேந்திர சோழனின் தாய் அல்ல. சிற்றன்னைதான். ராஜேந்திர சோழனின் தாய் வானவன் மாதேவியார். ஆனால் அவரை விட ராஜேந்திர சோழன் மீது அதிக அன்பு, பாசம், அக்கறை கொண்டு இருந்தவர்தான் பஞ்சவன் மாதேவியார். அதனால்தான் அவரது இறப்பை தாங்க முடியாத ராஜேந்திர சோழன் அவருக்காக பள்ளிப்படை கோயிலை கட்டினார். சரிங்க. கோயில்ன்னா இறைவனுக்காக கட்டப்பட்ட இடம்தானே. ஆனால் இறந்தவர்களுக்கு எப்படி என்ற கேள்வி எழலாம். இதோ அதற்கான விளக்கம்
அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்தால், குறிப்பாக அரசன் அல்லது அரசிக்கு அமைக்கப்படும் சமாதி கோவில்தான் பள்ளிப்படை கோவில். இதில் முக்கியமான விஷயம் இறந்தவர் சிவதீட்சை பெற்றவராக இருக்க வேண்டும். பொதுவாக சிவதீட்சை பெற்றவர்களின் உடலை தீக்கு இரையாக்கக்கூடாது என்பது சைவ மரபு. அப்படி சிவதீட்சை பெற்றவரின் உடலை எரித்தால் அது சிவபெருமானின் உடலையே தீயிட்டு எரிப்பதற்கு சமம் என்பது நம்பிக்கை. சிவதீட்சை பெற்றவர்களின் உடலை தீயிட்டு எரித்தால், அது அந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும். நோய்,பஞ்சம், வறுமை போன்றவற்றால் மக்கள் துன்புறுவார்கள் என்றும் நம்பப்பட்டது.
இதனால் சிவதீட்சை பெற்றவர்களின உடலை சுத்தம் செய்து, குழிவெட்டி உடலை கிழக்குப் பக்கம் பார்க்கும் வகையில் அமர வைத்து, அந்த உடலுக்கு அனைத்து வகை அபிஷேகங்களையும் செய்து, படையலிட்டு, அவற்றை அந்த உடலுக்குக் கொடுப்பதாக பாவித்து, பின்னர் அந்த உடலை அமர்ந்த நிலையில் அப்படியே மண் மூடிப் புதைத்து, தலைக்கு மேல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வார்கள். இதுதான் பள்ளிப்படை கோவில் என்று அழைக்கப்படுகிறது.
அப்படிதான் தன் சிற்றன்னை மாதேவியார் இறப்புக்கு பின் ராஜேந்திரன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் இடையே உள்ள பழையாறை கிராமத்தில் பள்ளிப்படை கோவிலை கட்டினார். இது பஞ்சவன்மாதேவீச்சரம் என்று அழைக்கப்படுகிறது.
பழுவேட்டரையர் குலப்பெண்ணான பஞ்சவன் மாதேவியின் உடலை வைத்து, அதன்மேல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கட்டப்பட்ட பள்ளிப்படை கோவில்தான் இது. ராஜேந்திர சோழன் இந்த கோவிலை கட்டினான் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இந்த கோவிலின் சுற்றுப்புற சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரிடத்தில் இது பள்ளிப்படை கோவில் என்பதும், பஞ்சவன் மாதேவிக்காக எழுப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள நந்தி பளபளப்பாகவும், மணிகள் கட்டப்பட்டு கலைநயத்துடனும் காணப்படுகிறது. பஞ்சவன் மாதேவி பழுவேட்டரையர் வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் அந்த வகை (பழுவேட்டரையர் பாணி) கலை நுணுக்கத்துடன் கூடிய சிற்ப வகை அமைப்பு இந்த பள்ளிப்படை கோவிலில் காணப்படுகிறது.
தமிழர் வரலாற்றில் எத்தனையோ வகை வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் இந்தப் பள்ளிப்படை கோயில் அமைப்பும் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள வரலாற்றை தாங்கி நிற்கும் முக்கிய கோவில்களுள் ஒன்று இந்த பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில் என்றால் மிகையில்லை.