திருவாரூர் மாவட்டம முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 543 மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்காததை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக முத்துப்பேட்டை மீனவ கிராமங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


முத்துப்பேட்டை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை ஒட்டிய உப்பூர், ஆலங்காடு, தொண்டியக்காடு, கற்பகநாதர் குளம், வாடியக்காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.   இவர்களுக்கு ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தை ஒட்டி தடைக்கால நிவாரணமாக ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த மீனவர்களில் ஒரு சிலருக்கு கால் ஏக்கர், அரை ஏக்கர் என விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்கள் உள்ள மீனவர்களுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு 543 மீனவர்களுக்கு பிரதமர் கிசான் திட்ட நிதி வந்த நிலையில், மீனவர்களுக்கு தடைகால நிவாரணமாக 8000 வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்து வந்துள்ளனர். 


மீன் பிடி தொழிலே பிரதானம் - மீனவர்கள் கண்ணீர்


முத்துப்பேட்டை மீனவர்களை பொருத்தவரை மீன்பிடி தொழில் மட்டுமே பிரதானமாகும். ஆண்டு முழுவதும் மீன்பிடித்து மட்டுமே  தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு பிரதமர் கிசான் திட்ட நிதி உதவி தேவையில்லை என 543 மீனவர்களும் எழுதிக் கொடுத்து, எம்எல்ஏ மூலமாக மீன்வளத்துறை அமைச்சகம் வரை அதிகாரிகளை சென்று பார்த்த பின்னரும், இதுவரை மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கப்படவில்லை என அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.  அரசு அதிகாரிகளின் இத்தகைய அலட்சியப் போக்கு காரணமாக மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. அனைவரும் மத்திய அரசின் திட்டம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தும் இது போன்று நடப்பது வேதனையாக உள்ளதாகவும் இதனால் தங்கள் குடும்பம் கஷ்டமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


நிவாரணம் கேட்டு - வேலை நிறுத்த்த்தை அறித்த மீனவர்கள்


எனவே இத்தகைய போக்கினை கண்டித்து, வரும் திங்கட்கிழமை முதல், முத்துப்பேட்டை கிராமத்தை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் மேலும் திங்கட்கிழமை காலை முதல் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்துள்ளோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.