பலவகையிலும் போதை:
தஞ்சாவூரில் கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. குடித்துதான் ஆக வேண்டும் என்று போதைக்கு அடிமையான இளைஞர்கள் பல்வேறு பொருட்களிலும் தங்கள் போதை தாகத்தை தணித்து கொண்டனர். உதாரணமாக கஞ்சா மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் சில குறிப்பிட்ட மாத்திரைகள், சைக்கிள் பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் சொலிசன், இங்க் ரிமூவர் என்று பலவகையிலும் போதை ஏற்றிக் கொண்டனர்.
தமிழக அரசு மற்றும் போலீசாரின் தொடர் நடவடிக்கைகளால் கஞ்சா மற்றும் பிற மாநில மது விற்பனை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது புதிய பிரச்னை ஒன்று முளைத்துள்ளது. அதுதான் நைட்ரோ மற்றும் டைட்டால் மாத்திரைகள். டாக்டரின் பரிந்துரையின்றி இதை சாப்பிடக்கூடாது. காரணம் டைடோல் மாத்திரை வலிக்கு உதவும் ஓபியாய்டு மருந்து என்று அறியப்படுகிறது. ஒபியாய்டு பொதுவாக போதைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. மிதமானது முதல் கடுமையான வலிக்கு நிவாரணம் அளிக்க மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை தங்களுக்கு பழக்கமான மருந்து கடைகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் கிறக்கமான மனநிலையில் ஏற்படுகிறது.
தாக்குதலில் ஈடுபடும் இளைஞர்கள்:
அதனால் தங்களை பெரிய ரவுடி என்று மனதளவில் நினைத்துக்கொண்டு பல்வேறு தகராறுகளில் ஈடுபடுகின்றனர். இதுபோல்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை சிவகங்கை பூங்கா சாலையோர வியாபாரிகளை சில சிறுவர்கள் தாக்கினர். இவர்கள் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர். மேலும் திலகர் திடல் வாசலில் பானிபூரி கடை வைத்திருக்கும் வியாபாரி மற்றும் அருகில் பழக்கடை வைத்திருந்தவரை தாக்கி செல்போனை திருடிச் சென்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான பழ வியாபாரியான சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை சேவப்பநாயக்கன் வாரியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து செய்து மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த சிறுவர்கள் கஞ்சா மற்றும் நைட்ரோ, டைட்டால் ஆகிய மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு இதுபோன்று ரகளையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சட்டப்படி கடும் நடவடிக்கை :
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ”பழ வியாபாரி மீது சிறுவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மருந்துக்கடையில் டாக்டர் பரிந்துரை இல்லாமல் போதைக்காக நைட்ரோ மற்றும் டைடால் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதுபோன்று டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இது போன்ற மாத்திரைகளை மருந்து கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது. மேலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இந்த மாத்திரைகளை விற்பனை செய்யாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மீறி டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இன்றி இதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்துக்கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.