நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் நவம்பர் 12 -ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை சூடுபிடித்து நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு விற்பனையை விற்பனையாளர்கள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் ஒரே இடத்தில் ஏராளமான பட்டாசு கடைகள் அமைந்துள்ள பெரிய கடைத்தெருவில் உள்ள வெடிக்கடைகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


கடைகளில் பாதுகாப்புக்காக மணல், தண்ணீர், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பட்டாசு கடைகளின் உள்ளே சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.




பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அதில் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட ஒரு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்படும் சிலரை பட்டாசு கடைகள் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.


தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பலரும் உயிரிழந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பது என்பது முடியாத காரியமாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்து 4 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.




அதேபோன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழக அரசு தமிழகத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய உத்தரவை பிறப்பித்து.  அதனை தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் காவல்துறையினர் ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.




அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையின் போது அங்கு சிவகுமாரின் மனைவி 26 வயதான கலா,  பழனிச்சாமி மனைவி 56 வயதான இந்திரா, சிவக்குமாரின் மச்சராஜ் மனைவி 50 வயதான தனுஷ்கோடி ஆகிய மூவரும் நாட்டு வெடிகளை தயாரித்து உள்ளனர். இதை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களைக் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு  கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். 




காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சிவகுமார் பணியாற்றும் பட்டாசு குடோனில் இருந்து வெடி மருந்தை எடுத்து வந்து கொடுத்து இவர்கள் மூவரும் சேர்ந்து அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக  பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.


தொடர்ந்து காவல்துறையினர் சிவகுமார் வீட்டில் இருந்த நான்கு கிலோ எடையுள்ள சல்பர், பொட்டு உப்பு, அலுமினிய பவுடர், வெடி மருந்து மற்றும் மைதா மாவு, மிக்ஸிங் கரித்துள், திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த வெடி மருந்தை தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றி கொள்ளிடம் ஆற்றில் கரைத்து செயலிழக்க வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்கது.