தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீலகிரி, கோயம்புத்தார், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், திருப்பூர். திண்டுக்கல், ஈரோடு, சேவல், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும், நேற்று காலை முதல் தற்போது வரை கனமழையாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 138 மில்லி மீட்டர் மழையானது பெய்துள்ளது.




கடந்த 24 மணி நேரத்தில் காலை 8 மணி வரை மயிலாடுதுறையில் 35.40 மில்லி மீட்டர்,  தரங்கம்பாடியில் 11 மில்லி மீட்டர், சீர்காழி 63.8 மில்லி மீட்டர் கொள்ளிடம் 3.80 மில்லி மீட்டர், மணல்மேடு 24 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 63.8 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக கொள்ளிடம் தில் 3.80 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா  இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.




கனமழை காரணமாக காலை 6 மணிக்கே நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட அருகே உள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் காலை 8.15 மணிக்கு மேல் கால தாமதமாக அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், ஏராளமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து மழையில் நனைந்தவாறு திரும்பிச் சென்றனர்.  மாணவர்கள் அவதி அடைவதை தடுக்கும் வகையில் விடுமுறை அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் முன்னதாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




மேலும், தற்போது மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, மங்கைநல்லூர், மணல்மேடு தரங்கம்பாடி, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம், பூம்புகார், தரங்ங உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  மயிலாடுதுறை நகரப் பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்ந்து போனதால் மழை நீர் வடிய வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும்  இந்த மழையால் குறுவை அறுவடை செய்ய முடியாமல் பணிகள் பாதிக்கப்பட்டு பயிர்களும் சேதமடைந்துள்ளது.