மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளை விநாயகர் அவதரித்த நாளாக கருதி விநாயகர் சதுர்த்தியாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவாரூரில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே செதலபதி கிராமத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தர் அருணகிரி ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான தலமான சிதளபதியில் உள்ள ஸ்ரீ சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் வெளிப்புறத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது இந்த ஆதி விநாயகர் ஆலயம் இங்கு ஆதி விநாயகர் தும்பிக்கை இல்லாமல் மனித முகத்தோடு காட்சி அளிக்கிறார். இந்த ஆதி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஹோமம் நடைபெற்று மகா பூர்ணாகித்தி நடைபெற்றது. விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி காப்பு அணிந்து மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும் அதனை தொடர்ந்து லட்ச அர்ச்சனை நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மாவிலை தோரணம் தென்னை ஓலை தோரணம் எருக்கன் பூ மாலை, அருகம்புல் மாலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் நின்று வாங்கிச் சென்றனர். அச்சு வைத்து மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் அவ்வப்போது தயாரித்து பொதுமக்களிடம் வழங்கினர். இந்த மண்ணாலான விநாயகர் சிலைகள் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வடிவத்திற்கு தகுந்தார் போல் விற்பனை செய்யப்பட்டது. வீடுகளில் விநாயகருக்கு வழிபாடு நடத்தும் பொருட்டு மண்ணாலான விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்று அவற்றுக்கு கொழுக்கட்டை, புத்தரிசி போன்றவற்றை படைத்து அந்த மண்ணாலான விநாயகரை தண்ணீரில் கரைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்டு மாவிலை தோரணம் தென்னை ஓலை தோரணம் ஆகியவற்றையும் விநாயகருக்கு உகந்ததாக கருதப்படும் எருக்கன் பூ மாலை அருகம்புல் மாலை ஆகியவற்றையும் மன்னாலான விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவதற்கும் பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
மேலும் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள சர்க்கரை விநாயகர் ஆலயத்தில் தேசியக்கொடி வண்ணத்தில் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது அனைத்து தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதேபோன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு எதிரில் உள்ள மாற்றுரைரைத்த விநாயகர் ஆலயத்திலும் பெரும்பாலான பொதுமக்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர். திருவாரூர் மாங்குடி கொரடாச்சேரி கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக விநாயகர் ஊர்வலம் செல்வதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது மழை விட்ட பின்னரே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க முடியும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்