தஞ்சாவூர்: ஒன்னுமே செய்யலையே என்று பொதுமக்கள் திமுக கவுன்சிலர் மீது புகார் தெரிவித்த நிலையில் தான் 4 ஆண்டுகள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு நோட்டீஸ் ஒட்டினார் கவுன்சிலர். இதனால் திருச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் மீது ஷண்முகா நகர் மக்கள் புகார் கூறி போராட்டம் நடத்திய நிலையில் 4 ஆண்டு சாதனைகளை மற்றும் வர இருக்கும் திட்டங்களை போஸ்டர் ஒட்டி தெரிவித்ததால் பரபரப்பு ஏற்படுள்ளது.

திருச்சி மாநகராட்சி, வார்டு 25ல் உள்ள ஷண்முகா நகர் பகுதி மக்கள், புதிய பொதுப் பூங்கா அமைக்கும் திட்டத்தில் தாமதம் ஏற்படுவதைக் கண்டித்து அடையாள உண்ணாவிரதம் நடத்தினர். இந்த பூங்கா திட்டத்திற்கு மார்ச் 2023ல் நகர்ப்புற நிர்வாக அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார். பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை ஒரு தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும், அதற்கு உள்ளூர் திமுக கவுன்சிலர் உடந்தையாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Continues below advertisement

இதற்கு பதிலடியாக, கவுன்சிலர் தனது வார்டில் தனது பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் வரவிருக்கும் பொதுத் திட்டங்களின் பட்டியலை சுவரொட்டிகளாக ஒட்டியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஷண்முகா நகர் நல சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தரப்பில் கூறுகையில், மாநகராட்சி ஆறாவது குறுக்கு சாலையில் புதிய பூங்கா அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கியுள்ளது. சுமார் 7,200 சதுர அடி நிலம் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. இது 1,000 குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

கடந்த மார்ச் 15, 2023 அன்று அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார். ஆனால், சில நாட்களிலேயே, மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு தனிநபர் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மார்ச் 28, 2023 அன்று நிலம் ஆய்வு செய்யப்பட்டு, அது அரசு நிலம் என்றும், 'நந்தவனம்' (தோட்டம்) என்றும் வகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பூங்கா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரிக்க முயல்கிறார்கள். எங்கள் கவுன்சிலர் கே.எஸ். நாகராஜன் மாற்று இடத்தை பரிந்துரைக்கிறார், அதில் எங்களுக்கு விருப்பமில்லை. அவர்தான் இந்த திட்டத்தை நிறுத்துகிறார் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று பொதுமக்களின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், புதூர் சந்திப்பில் போராட்டம் நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கவுன்சிலர் நாகராஜன் ஷண்முகா நகரில் சுவரொட்டிகளை ஒட்டி தனது கடந்த நான்கு ஆண்டுகால சாதனைகளைப் பட்டியலிட்டார். "பூங்காவுக்காக முதலில் முன்மொழியப்பட்ட நிலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட தனியார் நிலம் என்று கூறப்படுகிறது. அதனால், வரவிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகில் புதிய பூங்கா அமைக்க நான் பரிந்துரைத்தேன்," என்று அவர் தரப்பில் தெரிவித்துள்ளார். தங்கள் பகுதியில் பொதுப் பூங்கா இல்லாததால் பெண்கள் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது என்றும், இதனால் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். முதலில் அடையாளம் காணப்பட்ட இடத்திலேயே பூங்கா அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து மேயர் மு. அன்பழகன் தரப்பில் கூறுகையில், "பொதுமக்கள் ஒரு பொதுப் பூங்காவை விரும்புகிறார்கள், அதே நேரத்தில் தனியார் தரப்பினர் ஒரு சொத்தை மேம்படுத்த கட்டிட திட்ட அனுமதி கோருகின்றனர். சர்ச்சைக்குரிய நிலத்தில் பூங்கா அமைப்பது தணிக்கையின் போது சிக்கல்களை ஏற்படுத்தும். நாங்கள் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம் என்றார். 

இந்த பூங்கா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் குறித்த சர்ச்சை தொடர்வதால், ஷண்முகா நகர் மக்களின் நீண்ட நாள் கனவான பொதுப் பூங்கா அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.