தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கக்கரை நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக்குழு ஆய்வு செய்தனர். மேலும் மாதிரிக்காக நெல்லை சேகரித்து சென்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடிதம் எழுதியதை தொடர்ந்து இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் மத்தியக்குழுவினர் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக டெல்டா மாவட்டங்கள் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இந்த டெல்டா மாவட்டங்களில் நடப்பு ஆண்டு 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அறுவடை பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். மேலும் ஈரப்பதத்தின் சதவீதத்தை அதிகரித்து அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகப்படுத்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இது குறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு தஞ்சை வந்தது. திருச்சியில் இருந்து தஞ்சை வந்த மத்தியக்குழுவில் மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குனர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் , அபிஷேக் பாண்டே ஆகிய 4 பேர் இடம்பெற்று இருந்தனர்.
அவர்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில், தஞ்சை மண்டல மேலாளர் (பொ) கார்த்திகைசாமி, வேளாண்மை இணை இயக்குனர் வித்யா ஆகியோர் உடன் வந்தனர்.
முதல் கட்டமாக மத்தியக்குழுவினர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள கக்கரையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல்லில் இருந்து மாதிரிக்காக துணிப்பைகளில் எடுத்துச்சென்றனர். பின்னர் அவர்கள் நெல்லின் ஈரப்பதம் எவ்வளவு உள்ளன? என்பதையும் அதற்கான கருவி மூலம் பரிசோதனை செய்தனர். பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து புதூர், தெலுங்கன்குடிக்காடு, புலவன்காடு, பாப்பாநாடு உள்ளிட்ட பகுதியிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து நெல்மணிகளை சேகரித்தனர். இதன் அடிப்படையில் விவசாயிகளின் நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வளவு தேங்கி உள்ளது. அதன் ஈரப்பதம் எவ்வளவு சீதோஷ்ண நிலை உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் மத்தியக்குழுவினர் தஞ்சை வந்து தங்கினர். இன்று (வியாழக்கிழமை) மத்தியக்குழுவினர் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 குழுவாக பிரிந்து சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
கக்கரையில் ஆய்வு முடித்த பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில், மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நெல்மணிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், கொள்முதலில் ஈரப்பதத்தை அதிகரிப்பது தொடர்பாக, மத்திய நிபுணர்கள் குழுவை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதன்படி மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
17 சதவீத ஈரப்பதத்திற்கு குறைவாகவும் நெல்லை வழங்க விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆனால் ஜனவரியில் பெய்த மழை மற்றும் பனிப்பொழிவு போன்ற சீதோஷ்ண நிலையால், 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய நிபுணர் குழுவிடம் விவசாயிகள் கேட்டுள்ளனர். விவசாயிகளின் கருத்துக்களை ஏற்று, மத்திய அரசின் அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்ன நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். அரசு சார்பிலும் மழையால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்துள்ளோம்.
ஆய்வின் போது மத்தியக்குழுவினர் 80 நெல் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்தில் பரிசோதிக்க உள்ளனர். நெல்பழம் நோய் குறித்து,தமிழ்நாடு வேளாண் கல்லூரியை சேர்ந்த 4 பேர் ஆய்வு செய்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 76 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.