தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம், மிசின் தெருவைச் சேர்ந்தவர் அருமதுரை. விவசாயியான இவருக்கு திலிப்குமார் (14) என்ற மகன் உள்ளார். தீலிப்குமார், கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கொரோனா தொற்று பாதிப்பினால், கடந்த சில மாதங்களாக பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தனது வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தான். இந்நிலையில் நேற்று தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றது.
அப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரயில் சென்றதால், மாடு அடிபட்டு இறந்து விடும் என பதறிய சிறுவன் மாட்டை அங்கிருந்த விரட்ட ரயில் தண்டவாளத்துக்கு ஓடினான். மாடு ரயிலில் அடிபட்டு இறந்து போனால் வீட்டிலுள்ளவர்கள் திட்டுவார்கள் என பயந்து, மாட்டை விரட்டுவதற்காக தலைதெறிக்க ஒடினான். அப்போது அங்கிருந்தவர்கள், தீலிப்குமாரை ஒடாதே நில் என்று கூச்சலிட்டனர். மாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தீலிப்குமார் ஒடினான்.
ஆனால், தீலிப்குமார் விரட்டி கொண்டே ஒடி வருவதை பார்த்த மாடு, தண்டவாளத்தை கடந்து மறுபுறம் சென்றது. இதனை அறியாத தீலிப்குமார், தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் மோதி அடிபட்டு அதே இடத்தில் இறந்தார். சிறுவன் ரயில் மோதி இறந்த தகவல் கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாட்டை விரட்ட சென்ற சிறுவன் தீலிப்குமார், ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது