மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள துறைமுக கிராமமான பழையார் முதல் கீழமூவர்கரை கிராமம் வரை மீனவர் கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலை திட்டம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழையாறு முதல் கொட்டாயமேடு வரை சாலை அமைக்கபட்டது. மேலும் திருமுல்லைவாசல் கிராமத்தில் இருந்து கீழமூவர்கரை கிராமத்தை இணைக்க திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் கடலுடன் இணையும்  உப்பனாற்றில் பாலம் தேவைபட்டத்து, அதனையடுத்து  திருமுல்லைவாசல்  கிராமத்தில் உள்ள உப்பனாற்றில்  31 கோடியே 44 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரமாண்டமான பாலம் கட்டபட்டது. ஆனால், பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் அப்பாலத்திற்கு இன்றுவரை இணைப்புச்சாலை அமைக்கபடாமல் அந்தரத்தில் நிற்கிறது.





மேலும், பழையார் முதல் கொட்டாய் மேடு கிராம் வரை போடப்பட்ட சாலையும் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சாலைகள் கரைந்தும் உடைந்தும் பாழாய் போய் காணப்படுகிறது. இந்நிலையில் உப்பனாற்று பாலத்திற்கு இணைப்புச்சாலை அமைத்து, சாலைகளை சீரமைக்கபட்டால், கடலோர கிராமமக்கள் மீன் விற்பனை மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு எளிதாக சென்று வர முடியும்.இதனால் நேரவிரையத்தையும், பொருட் செலவும் பல மடங்கும் குறையும் என்பதால் உடனே சாலை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மீனவ கிராம மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை கடந்த பத்தாண்டு ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




இந்த சூழலில் பாலம் இணைப்பு சாலை அமைக்கும் இடத்தில் பல வீடுகள் உள்ளதால் வீட்டின் உரிமையாளர்கள் பலரும் உரிய இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இதனையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்த நிலையில், அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மேல் முறையீடு செய்துள்ளனர். இதனால்   பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க முடியாமல் பன்னிரெண்டு ஆண்டுகளாக 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் பயனற்று அந்தரத்தில் நிற்கிறது. 




கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் மீண்டும் தற்போது ஆளுங்கட்சியாக திமுக வந்துள்ள நிலையில் இத்திட்டம் நிறைவு பெற இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கண்டு, இணைப்பு சாலை அமைக்கும் இடத்திலுள்ள வீடுகளுக்கும், நிலங்களுக்கும் உரிய  நிவாரணம் வழங்க உத்தரவிட்டு, பாலத்திற்கான இணைப்பு சாலையினை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அப்பாலத்தால் பயன் பெற போகும் மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.