வரும் 26ம் தேதி குடியரசு தின கலைநிகழ்ச்சிக்காக நாட்டுப்புற நடனம், கோலாட்டம், கும்மி என்று பரபரப்பாக பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர் வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள்.

தஞ்சை அருகே வல்லத்தில் இயங்கி வருகிறது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். 1082 மாணவிகளுடன் இப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர்.

இந்நிலையில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க இப்பள்ளியை சேர்ந்த 56 மாணவிகள் தேர்வாகி உள்ளனர். ஆண்டுோறும் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் தஞ்சை மாவட்டத்தை பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த இந்த மாணவிகள் நம் பாரம்பரிய நடனமான நாட்டுப்புற நடனங்களை கலைநிகழ்ச்சியில் செய்து காட்ட உள்ளனர். இதற்காக திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில் ஒரு பக்கம் தேர்வு மறு பக்கம் பயிற்சி என்று தங்களின் திறமைகளுக்கு பட்டைத்தீட்டுகின்றனர். இம்மாணவிகள் கரகம், காவடியாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் என நாட்டுப்புற நடனங்களை பயிற்சி எடுத்தனர்.





இம்மாணவிகளுக்கு பள்ளி துணை தலைமை ஆசிரியர் மாலாராணி, ஆசிரியை கங்காபாகீரதி ஆகியோர் வெகு முனைப்புடன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களின் மேற்பார்வையில் மாணவிகள் பயிற்சி எடுத்து அதில் ஏற்படும் சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டனர். முக்கியமாக இப்பள்ளியை சேர்ந்த மாணவி கனிமொழியின் அட்டகாச குரலில் ஒலிக்கும் நாட்டுப்புறப்பாடலுக்கு பயிற்சி எடுத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவிகள் குழுவாக இணைந்து ஒற்றுமையுடன் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை (பொ) செயலெட்சுமி கூறுகையில், குறைந்த நாட்களே உள்ள நிலையிலும், திருப்புதல் தேர்வு நடக்கும் நிலையிலும் எம் பள்ளி மாணவிகள் குடியரசு தினவிழாவில் தங்கள் திறமைகளை காட்டுவதற்காக முழு முனைப்புடன் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக நாட்டுப்புற நடனங்களான கரகாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் என்று தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். வைரத்திற்கு பட்டை தீட்டுவது போல்தானே பயிற்சிகள் எடுப்பதால் திறமைகள் இன்னும் மெருகேறும். அந்த வகைகள் சிங்கப் பெண்களாக எம் பள்ளி மாணவிகள் நாட்டுப்புற நடனத்தில் கலக்குகின்றனர் என்றார்.