தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் நீர்வளத்துறை பொறியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின்  மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திருவோணம் ஒன்றிய நிர்வாகிகளின்  ஆலோசனை  கூட்டம் ஊரணிபுரத்தில் நடைபெற்றது.


கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் வி.கே.சின்னத்துரை, மாவட்டப் பொருளாளர் கே.பி.துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் வி.ஜி.அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு: தஞ்சாவூர் கல்லணை கால்வாய் வாய்க்கால் புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டப் பணிகள் கடந்த 2021 ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.


இதில் ஈச்சங்கோட்டை  முதல் இடையாத்தி அக்னியாறு பாலம் வரை சுமார் ரூ.256 கோடி மதிப்பீட்டில்  தனியார் நிறுவனத்தின் சார்பில்  கட்டுமானப்பணிகள்  நடைபெற்று வருகிறது. இப்பணியை பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில  கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளரின் ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டிலும் மற்றும் சில உதவி பொறியாளர்களின்  கண்காணிப்பிலும் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.


இதில் மேற்கண்ட மூன்று அதிகாரிகளும் சொந்த ஊரிலேயே தொடர்ந்து அக்னியாறு துறையிலேயே 12 ஆண்டுகளாக ஒரே இடத்தில்  வேலை பார்த்து வருவதால், இப்பகுதிகளில் உள்ள  ஏரி, குளங்களிலும், வடிகால்  வாரிகளில்  வண்டல் மண்களை அனுமதியின்றி அள்ள துணை போகின்றனர்.


மேலும், கல்லணை கால்வாய் வாய்க்காலில் தரமற்ற பொருட்களை கொண்டும் தரமற்ற பணிகளை செய்து வருவதை கண்டும் காணாமலும் உள்ளனர். இன்னும் சில பணிகள் செய்யாமலே செய்யப்பட்டதாக ஒப்பந்ததாரரும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பில்  உள்ள வேலைகளை செய்யாமல் அந்த பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.


அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தூர்வாரும் பணித்திட்டத்தில் அக்னியாறு கோட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முழுமையாக செய்யாமல் முறைகேடு செய்து விடுகின்றனர். இந்த அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்யவேண்டும், உரிய விசாரணை நடத்தி முறைகேடுகளாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 6 ம்தேதி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தூர்வாரும் பணிகளை பார்வையிட வருகைதரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின்  கவனத்தை ஈர்க்கும் வகையில் பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


வரும் 6ம் தேதி முதல்வர் வருகையின் போது விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்குள் விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.