தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்தும், 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் சா்க்கரை ஆலை முன் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீா்த்து, அப்பிரச்னையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவாா்க்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில் தீச்சட்டி ஏந்தும் போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நாக. முருகேசன் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் விவசாயிகளின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கவில்லை என்றால் தமிழக முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்க்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்த முழு தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீச்சட்டி ஏந்தி, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுடன் ஆய்வு கூட்டம்
தஞ்சாவூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் கரும்பு வெல்லத்தை மறைமுக ஏலம் வாயிலாக விற்பனை செய்வது தொடர்பாக விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் ஆய்வு கூட்டம் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைபெற்றது.
இதில் விவசாயிகளின் கரும்பு வெல்லத்தை பிரதிவாரம் வியாழன் அன்று மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. பாபநாசம் மற்றும் வெளி மாவட்ட வணிகர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட கோரப்பட்டது.
பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் பயன்படுத்தி தங்களது வெல்லத்தினை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடைய விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ் பாபு கேட்டுக் கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.