ABP Nadu செய்தி எதிரொலியாக தஞ்சை அருகே சிவகாமிபுரத்தில் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் இருந்த பெரிய அளவிலான பள்ளம் சீரமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் இருந்து ஆலக்குடிக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் சிறிய அளவில் பள்ளம் இருந்தது. தொடர்ந்து நாளுக்கு நாள் வாகனங்கள் சென்று வந்ததில் அந்த பள்ளம் பெரிய பள்ளமாக மாறியது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பைக்குகள், கார், ஆட்டோ, லோடுவேன், டிராக்டர்கள் சென்று வருகின்றன.
தஞ்சை மற்றும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆவாரம்பட்டி, புதுகல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் சாலையாக இது உள்ளது. மேலும் பால்வேன், கடைகளுக்கு விற்பனைக்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்கள் போன்றவை அதிகளவில் சென்று வருகின்றன. இப்பகுதி முழுவதும் கிராமப்பகுதி என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சென்று வரும். தற்போது சம்பா, தாளடி சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் நாற்றங்கால் இயந்திரங்கள், டிராக்டர்கள் அதிகளவில் சென்று வருகின்றன. மேலும் கரம்பை வழியாக வண்ணாரப்பேட்டைக்கு ரயில்வே கீழ்பாலம் வழியாக கார் மற்றும் பைக்குகள் தினமும் சென்று வருகின்றன. சாலை திரும்பும் இடத்தில் இந்த பள்ளம் இருந்ததால் எதிர் எதிர் திசைகளில் வரும் வாகனங்கள் தடுமாறும் நிலை இருந்து வந்தது.
இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக வேலை முடிந்து பைக்குகளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்தது. பெரிய அளவில் இந்த பள்ளம் மாறிக் கொண்டே வந்தது குறித்து செய்தி வெளியானது. இதையடுத்து இந்த பள்ளத்தில் ஜல்லிக்கல் கொட்டி செம்மண் அடித்து பள்ளம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.இதனால் வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ”இரவு நேரத்தில் வாகனங்கள் வருபவர்கள் எதிரில் மற்றொரு வாகனம் வந்தால் தடுமாறி விழுந்து அடிபட்டு வந்தனர். இதுகுறித்து ABP Nadu செய்தி வெளியிட்டது. இதையடுத்து பல மாதங்களாக பெரும் பள்ளமாக மாறி வந்த இதனை தற்போது ஜல்லிக்கல் மற்றும் செம்மண் அடித்து சரி செய்துள்ளனர். இருப்பினும் இதனை முழுமையாக தார் சாலையாக மாற்றினால்தான் சரியாக இருக்கும். மழை அதிகம் பெய்தால் மீண்டும் பள்ளமாக மாறிவிடக்கூடாது. இருப்பினும் இந்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக அதிகாரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.
உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?
ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.