தஞ்சாவூர்: கோழிச்சண்டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முதியவர் ஒருவரின் உயிரை பறித்த சம்பவம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகையன்(82). இவர் தனது வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இந்த கோழியை அடைக்கும் பகுதிக்கு இவரது கோழியும் அந்த பகுதியை சேர்ந்த மற்றொருவரின் கோழியும் வந்துவிட்டது.
தங்கள் வீட்டு கோழி முருகையன் வீட்டுக்குள் செல்வதை பார்த்துள்ளார் மற்றொரு கோழியின் உரிமையாளர். உடன் அவர் முருகையன் வீட்டுக்கு வந்து உங்கள் கோழியுடன் எங்கள் வீட்டு கோழியும் சேர்ந்து வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அதை அடைத்து வைத்துள்ளீர்கள் எங்கள் கோழியை வெளியில் விடுங்கள் என்று முருகையனிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு முருகையன் எது யாருடைய கோழி என்பது எனக்கு தெரியவில்லை. எனது மகன் வந்தவுடன் கேட்டு விடுவிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது எதிர்தரப்பு நபர்கள் தாக்கியதில் முருகையன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பட்டீஸ்வரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகையன் இறந்தது குறித்து தகவல் அறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திாிக்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் முருகையன் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். தில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
கோழி சண்டையில் முதியவர் உயிர் பறிபோன சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.