தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டையில் நுகர்பொருள் வாணிபக்கழகம், நவீன அரிசிஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றது. இங்கு சுமார்  50க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 100க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த ஆலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து, குடோனுக்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை லாரி மூலம் ஏற்றி கொண்டு, நவீன அரிசி ஆலைக்கு கொண்டு வருவார்கள். பின்னர் அந்த அரிசியை,  தமிழக அரசின் உத்தரவின்படி, வெளி மாவட்டத்திற்கோ அல்லது வெளி மாநிலத்திற்கோ அனுப்பி வைக்கப்படுவார்கள். இங்கு தஞ்சாவூர் மாவட்டம், புதிய பஸ் நிலையம், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடோனிலிருந்து நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது.



தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குறுவை பருவத்தில் 3.60 லட்சம் டன்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.30 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2.30 லட்சம் டன்கள் கொள்முதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொள்முதல் பணி உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் நெல் கொள் முதல் அதிகரித்து வருவதால், குடோனில் இருந்த, லாரிகள் மூலம் நவீன அரிசி ஆலைக்கு அரவைக்காக அனுப்பி வைக்கின்றார்கள். ஆனால் ஆலையிலுள்ள குடோனில், போதுமான இடமில்லாததால், கடந்த 6 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளுடன் லாரிகள் தேங்கி நிற்கின்றது. இதே போல் ஆலையின் உள்ளே உள்ள குடோன் முழுவதும் நிரம்பி விட்டதால், அதிலுள்ள மூட்டைகளிலுள்ள  அரிசிகள், சாக்குகள், குருணைகள் அனைத்து எலிகள் கடித்தும், உமி மூட்டைகள், சாக்குகளை குதறி, வீணாகி வருகின்றது. எனவே, மாவட்ட நிர்வாகம், அம்மன் பேட்டையிலுள்ள நவீன அரிசி ஆலையில் தேங்கி வீணாகி வரும் அரிசி, உமி, குருணை மூட்டைகள், சாக்குகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் அனைத்தும் வீணாகி பல கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில், அம்மன்பேட்டையிலுள்ள நவீன அரிசி ஆலை, நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இந்த ஆலைக்கு கடந்த ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு நவீன முறையில் இயந்திரங்களை கொண்டு தற்போது இயங்கி வருகின்றது.




தற்போது அதிக அளவில் விளைச்சலால், ஆலை தொடர்ந்து இயங்கி வருகின்றத. இதனால் ஆலைக்குள்ளே உள்ள  குடோன்களில் ஆயிரக்கணக்கான  மூட்டைகள் நிரம்பிவிட்டது. மேலும், சாக்குகள், நெல்களை அரைத்து வரும் உமி, குருணைகள் அனைத்தும் மூட்டைகளாக கடந்த 10 மாதங்களாக தேங்கி கிடப்பில் உள்ளது இதனால் அதில் வண்டுகள் உற்பத்தியாகி, தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அரிப்பு போன்ற சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் பாதைகளால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பகல் இரவு நேரங்களில் எலிகள், மூட்டைகளை கடித்து குதறிவிடுகிறது. மூட்டைகளை கடிப்பதால்,  அரிசி, குருணைகள் சிதறி விடுகிறது. இதே போல் சாக்குகள் பல மாதங்களாக கிடப்பதால், அனைத்தும் சாக்குகளும், மடிந்து வீணாகி வருகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டால், ஆட்சி மாற்றமாகியுள்ளது, உமி போன்றவைகளை எடுப்பதற்கு டெண்டர் விடப்படவில்லை. டெண்டர் விட்ட பிறகு அகற்றப்படும் என்று பதில் கூறுகிறார்கள்.




இதே போல் லாரிகளில்  ஏற்றி வரும் நெல் மூட்டைகளை இறக்கி வைப்பதற்கு போதுமான இடமில்லாததால், கடந்த 6 நாட்களுக்கு மேலாக லாரியுடன் நெல் மூட்டைகள் காத்து கிடக்கின்றது. இதனால் உணவிற்கும், செலவிற்கும், டிரைவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், அம்மன் பேட்டையிலுள்ள நவீன அரிசி ஆலையில் வீணாகி வரும் நெல் மூட்டைகளையும், உமி, குருணை, சாக்குகளை பத்திரப்படுத்த வேண்டும், லாரியில் வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் இறக்க வேண்டும், தவறும் பட்சத்தில் அனைத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம், ஏற்படும் என்றார்.