தஞ்சாவூர்: பெயர் சொன்னாலே போதும் பொறி கலங்கும். எதிரி நாட்டு மன்னர்களுக்கு கிலி ஏற்படும். அத்தகைய பெருமையை உடைய சோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவராக திகழ்ந்த, உலகப்புகழ் பெற்ற மும்முடி சோழர்தான் முதலாம் இராஜராஜ சோழன். கடல் கடந்து சென்று வெற்றிகளை குவித்த மாமன்னர் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் சோழர்களின் பொற்காலம் என்றால் மிகையில்லை.


சோழர்களின் பொற்காலமான இராஜராஜசோழன் ஆட்சிக்காலம்


இராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழிவர்மன். விஜயாலய சோழன் நிறுவிய சோழப்பேரரசு இவர் காலத்திலும் மற்றும் இவர் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உன்னத நிலையை எட்டியது. தஞ்சாவூரில் உள்ள பெரியகோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழக கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாக இராஜராஜ சோழனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் புகழ்கொடி நாட்டி வருகிறது பெரியகோவில்.
 
இதேபோல்தான் பல வெற்றிகளை அடைந்து பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராஜியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவராக திகழ்ந்தவர்தான் இராஜராஜ சோழன். இராஜராஜ சோழன் கால போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது ‘முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்’ எனப்படும் மாலதீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை.


ராஜராஜ சோழனின் கப்பற்படை


எனினும் இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜ சோழன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பதுதான் முக்கியமான ஒன்றாகும். ராஜ ராஜசோழனின் கப்பல் படையை பற்றிய தெரிந்து கொள்வோம். உலகின் சிறப்பு வாய்ந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படை. கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜசோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டு, “திருநெல்வேலி அருங்காட்சியகத்தில்” பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது.


அதிக போர் வீரர்களை கொண்ட குழு


கப்பல் படை நிறைய குழுக்களை கொண்டிருந்தது. அனைத்து குழுவிற்கும் தலைவர் அரசர்.  இதில் கனம் (அதிக போர் வீரர்களை கொண்ட குழு) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது. இதை நிர்வகிப்பவர் கனாதிபதி என்று அழைக்கப்பட்டார். கனம் (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம். பெரும்பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு சென்றது. செயல்பட்டது. வென்றது.


கன்னி (போர் நேர / சிறப்பு பணிக்கான குழு). இதை நிர்வகிப்பவர் உயரிய கலபதி. கன்னி என்பது பொறி என்பதாகும். அதாவது எதிரிகளை ஒரு இடத்தில் லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப்போல), அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைப்பது ஆகும். இதோடு இவர்கள் பணி முடிந்து விடும். அடுத்து தளம் (நிரந்தரப்போர் பிரிவு) இதை நிர்வகிப்பவர் ஜலதளதிபதி. இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது.


பாதி நிரந்தர போர்ப்பிரிவை நிர்வகிக்கும் மண்டலாதிபதி


மண்டலம் (பாதி நிரந்தர போர்ப்பிரிவு) இதை நிர்வகிப்பவர் மண்டலாதிபதி. இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள். அணி இதை நிர்வகிப்பவர் அணிபதி. மூன்று கனங்களை கொண்ட பிரிவு. இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது. மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது.


பிரிவு என்ற அணி. இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர். உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் கீழ்பிரிவு-அதிபதி / தேவர் என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது. இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று.


கட்டுக்கோப்பான வீரம் நிறைந்த கப்பற்படை


இந்த கப்பல் படையை வைத்து தான் இலங்கை, இந்தோனேசியா, ஜாவா, மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அனைத்து நாடுகளையும் மாமன்னர் இராஜராஜ சோழன் கைப்பற்றினார். இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்பதை தெரிந்து கொள்வோம். இன்று புழக்கத்தில் இருக்கும் “NAVY” என்ற ஆங்கில வார்த்தை “நாவாய்” என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கட்டுக்கோப்பான, வீரமும், துணிச்சலும் நிறைந்த கப்பற்படையை ஒருங்கிணைத்து பல நாடுகளை கடல் கடந்து சென்று வென்ற பெருமை இராஜராஜ சோழனுக்கு உரித்தாகும்.