தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு மையம் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் மையம் இன்று முதல் இரண்டாவது தற்காலிக நுழைவாயில் மாற்றப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக தஞ்சை ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக விளங்கி வருகிறது. பயணிகள் எண்ணிக்கையிலும் வருவாயிலும் திருச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தஞ்சை ரயில் நிலையம் உள்ளது. வெளியூர் பயணிகள் தஞ்சைக்கும், தஞ்சை மாவட்ட பயணிகள் வெளியூருக்கு சென்று வருவது ஒரு புறம் இருந்தாலும் தஞ்சையில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் இருப்பதால் அதைக் காண தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 508 ரயில்வே நிலையங்களை மேம்படுத்தநிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 6ம் தேதி துவங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சை ரயில் நிலையமும் மேம்படுத்த தேர்வான நிலையில் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக முதற்கட்டமாக ரூ.15 கோடியை 29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய புனரமைப்பு, சுரங்கப்பாதை சீரமைப்பு, பயணியர் நிழற்குடை மல்டி லெவல் பார்க்கிங் வசதி, வைஃபை வசதி, கணிப்பு கேமரா, இயற்கை காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டு அதில் டைல்ஸ் கற்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் இரண்டாவது வழித்தட ரயில் பாதை அகற்றப்பட்டு பணிகள் முடிவடைந்துவிட்டது. ரயில் நிலையத்தின் முன் பகுதியின் நுழைவு வாயில் தகர ஷீட்டுகளால் மூடப்பட்டு நுழைவாயிலின் முன் பகுதி இடிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் நிலையம் அருகில் சரக்குகளை ஏற்றி செல்லும் பாதையை தற்காலிகமாக பயணிகள் வந்து செல்வதற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு மையம் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் மையம் சனிக்கிழமை முதல் இரண்டாவது தற்காலிக நுழைவாயில் மாற்றப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வில்அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.