சிலம்பம், கராத்தே, யோகா என்று மூன்று கலைகளிலும் அட்டகாசம் செய்கிறார் தஞ்சையை சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரஜேஸ் ராகவ் (6). வயது என்னவோ ஆறுதான். ஆனால் ஆறடி சிலம்பத்தை அனாயசமாக சுற்றுகிறார். காற்றுக்கூட உட்புகுந்து வெளியேற அச்சப்படும் என்ற அளவிற்கு வேகம்...வேகம்.. வேகம்தான். சுற்றும் சிலம்பத்திற்கு ஏற்ப கால்களும் முன்னும் பின்னும் நர்த்தனம் ஆடுகிறது. சிலம்பம் மட்டுமின்றி கராத்தே மற்றும் யோகா என ஆகிய மூன்று கலைகளில் மாநிலம் மற்றும் தேசியப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை குவித்து வருகிறார்.
நம் பாரம்பரியம், உடல் ஆரோக்கியம் அளிக்கும் கலையான சிலம்பத்தில் தனது மூன்று வயதிலேயே குறவஞ்சி, ஐயன் காலடி வரிசை, கல்வர் பத்து, போர் சிலம்பம், குத்து வரிசை மற்றும் கதம்ப வரிசை என்று பத்துக்கும் மேற்பட்ட சிலம்ப பாடங்களை சிலம்ப ஆசான் தஞ்சை ராஜேஷ் கண்ணாவிடம் கற்று தேர்ந்து, கற்றதை மனதில் பதித்து நொடி பொழுதில் செய்து காண்பிக்கிறார் சிறுவன் பிரஜேஸ் ராகவ். 6 வயதிற்குள் சிலம்பத்தில் இரண்டாம் தகுதி நிலை தேர்வை முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்ட அளவில் சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை மூன்று முறை பெற்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற பார்வைக்கு ஒரு பயணம் நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் சிலம்பம் சுற்றி காண்பித்து பரிசு பெற்றுள்ளார். இது ஒருபுறம் என்றால் கராத்தே தற்காப்பு கலையிலும் கோயம்புத்தூர், திருப்பூர், வேதாரண்யம் மற்றும் தஞ்சையில் நடைபெற்ற பல்வேறு மாநில மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் பெற்று அசத்தி உள்ளார்.
மாணவர் பிரஜேஸ் ராகவ் சிலம்பம் போட்டியில் மாநிலம், மாவட்ட அளவில் என்று மொத்தம் 8 தங்கப்பதக்கம் வாங்கி அசத்தி உள்ளார். மாநில அளவில் 3 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுள்ளார். இதேபோல் கராத்தேவில் தேசிய அளவிலும், தென்னிந்திய அளவிலும், மாநில அளவிலும் மொத்தம் 4 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மாநில அளவில் 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சிறிய வயதிலேயே கராத்தேவில் இரண்டு கிரேடிங் பயிற்சிகளை முடித்துள்ளார். யோகாவில் OWR 2019 ஆம் ஆண்டு அமைப்பு நடத்திய வேர்ல்ட் ரெக்கார்டில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார். நடப்பாண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட யோகா தின நிகழ்வில் யோகா செய்து காண்பித்து சான்றிதழ் பெற்று அசத்தி உள்ளார். சிலம்பம் சுற்றிவதில் வேகம், யோகாவில் அசத்தல், கராத்தேவில் எகிறல் என்று முத்தமிழ் போல மூன்று கலைகளிலும் தன் சிறுவயதிலேயே சாதனைகள் படைத்து வருகிறார்.